பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73

அறிவில் துறை போயோனே; கல்வியில் கண்ணிய முடையோனே ; ஆண்மையில் மேன்மை மேவினோனே. என்றாலும், இவன்பால் தீயசெயல் ஒன்று இருந்தது. அதுவே, இவன் கற்புக்கரசியான கண்ணகியைத் தணந்து வேறொரு மாதுடன் இன்புடன் வாழ்ந்து வந்ததாகும். அந்தோ ! கண்ணகி என்னும் பெயர் பெற்ற காரிகைமார்கட்கு அமைகின்ற கணவன்மார்கள் எல்லாம் தம் ஆருயிர் அனைய இல்லக்கிழத்தியரை விடுத்துப் பிற மாதரொடு வாழும் பெற்றியினர் போலும் ! கண்ணகியைத் தணந்து மாதவி என்பாளுடன் வாழ்ந்தனன் அன்றோ கோவலன்! அவனைப் போலவே வையாவிக் கோப்பெரும் பேகனும், கண்ணகியைத் தணந்து வேறொருத்தியிடம் வாழலானான்.

கண்ணகியின் துயரம்

இங்ஙனம் தன்னை மறந்து வேறொருத்தியுடன் தன் கணவன் வாழ்க்கை நடத்தினன் என்றாலும், அது குறித்துக் கண்ணகி அவனைத் தூற்றுதல் இன்றி, “எந்நாளேனும் இங்கு வந்து சேருவன்” என்று எண்ணி ஆறாத் துயருடன் வாழ்ந்துவரலானாள். ' குலமகட்குத் தெய்வம் தன் கொழுநனே' என்பது சட்டமேயானாலும், “தெய்வந் தொழா அள் கொழுநன் தொழுதெழுவாள்,” என்பது மறை மொழி என்றாலும், தன் கணவன் தகாத ஒழுக்கத்தில் ஈடுபட்டுள்ளமையின், அவனைத் தக்கவழியில் திருப்புவான் வேண்டி, இறைவனை வந்தித்து வாழ்த்தி வணங்கி வருவாளானாள்.