பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

119


இருந்திட வேண்டிய இனிய நிலை தோன்றிவிடுகிறது. அதற்கேற்ப ஆட்டக்காரர்களை உருவாக்கித் தயாரித்தளிக்கும் பொறுப்பு குழு பயிற்சியாளருக்கு அமைகிறது.

ஒரு குழுவை உருவாக்க வேண்டுமென்றால், ஒரு மணி நேரத்திலோ, ஒரு நாளிலோ முடியாது. ஆடுவதற்காக ஆட்களை சேர்த்து விடலாம். ஆனால், அறிவார்ந்த ஆட்டக்காரர்களைச் சேர்த்திட முடியாதே! அதனால், அடிப்படையான பண்புகளை உருவாக்கிட, ஆள் சேர்க்கும் ஆரம்ப காலந்தொட்டே, இச்சீரிய பணியைத் தொடங்கிவிட வேண்டும்.

பயிற்சி காலத்தில் பயிற்சியாளர் கற்றுத்தர வேண்டிய முக்கியமான மூன்று பணிகளை இங்கு குறிப்பிடுகின்றோம்.

1. சடுகுடு ஆட்டத்திற்கான அனைத்து விதிகளையும் மிகத் தெளிவாக விளக்கி, அவர்களுக்கு விதிகளைப் பற்றிப் பூரண ஞானத்தை உண்டாக்கி விடுவது. அதிலும் விஞ்ஞான பூர்வமான வளர்ச்சியில் முன்னேறிக் கொண்டிருக்கும் சடுகுடு ஆட்டத்திற்கு ஏற்ப, விளையாடுகின்ற தன்மையில் விதிகளைக் கற்பித்து வைத்தல்.

2. ஒவ்வொரு ஆட்டக்காரரும் தனக்குரிய கடமை என்ன? ஆட்டத்திறமை என்ன? அதனை எவ்வாறு அடைவது என்றெல்லாம் தன்னைப் பற்றி புரிந்து கொண்டு, தன் தகுதியை வளர்த்துக் கொள்ளவும், அதே தகுதியையும் திறமையையும் சக ஆட்டக்காரர்களுடன் இணைத்துத் தன் குழுவின் சக்தியையும், ஆற்றலையும் அதிகப்படுத்திட, ஒருங்கிணைந்து செயல்படும் வண்ணம் அவர்களை இணைந்து விளையாட வைத்தல்.