நன்னிலம், திருஅம்பர், தண்டலைநீணெறி, திருவானைக்கா, வைகல் முதலான ஸ்தலங்களில் எடுப்பித்த சிவாலயங்கள் இவனால் எடுப்பிக்கப்பட்டனவென்று தேவாரத்தினால் தெரிகிறது. இனி, இவ்வரசனைப்பற்றிவழங்கும் ஒரு சிறுகதை வரைகின்றேன் :- இவன் உறந்தையம்பதிக்கருகில் காவிரியில் நீராடுங்கால் தனது முத்தாரம் ஆற்றில் விழுந்து காணாமற்போக, நீரினின்று அடிவணங்கி 'ஆனைக்காவுடையண்ணலே! தாங்கள் என் முத்தாரத்தை ஏற்றுக்கொள்வீர்களாக' என்றுவேண்ட, அம்முத்தாரமும் காவிரியினின்று கொண்டுபோகப்பட்ட திருமஞ்சனக்குடத்திலிருந்து திருவானைக்காவுடைய சிவபெருமான் மீது ஆரமாகவீழ்ந்து திகழ்ந்தது. இதனைச் செங்கணானும் ஏனையோரும் அறிந்து ஆச்சரியமுற்றனர். இவ்விஷயத்தை, “தாரமாகிய பொன்னித்தண்டுறை யாடிவிழுந்து நீரினின்றடி போற்றிநின் மலர்கொள்ளெனவாங்கே யாரங்கொண்ட வெம்மானைக்காவுடையாதியை' என்னும் ஸ்ரீமத் -சுந்தரமூர்த்தி சுவாமிகள் வாக்கானு முணர்க. இவ்வரசனதுகாலம்:- இவனைச் சைவசமயாசாரியராகிய திருஞானசம்பந்த சுவாமிகள் தமது பாசுரங்களிற் கூறியுள்ளாரென்பது முன்னரே தெரிவித்திருக்கிறேன். திருஞானசம்பந்த சுவாமிகள் கி.பி.7-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் விளங்கியவரென்று காலஞ்சென்ற திருவனந்தபுரம் ப்ரொபஸர் சுந்தரம்பிள்ளைவயர்கள் நுண்ணிதின் ஆராய்ந்து வரையறுத்திருக்கின்றனர். ஆகவே சோழன் செங்கணானும் கி.பி.7-ம் நூற்றாண்டின் முன்னரேயிருந்திருக்க வேண்டும். கி.பி. 4-ம் நூற்றாண்டிற்குமேல் 10-ம் நூற்றாண்டு வரை பல்லவர்கள் என்னும் ஒரு பராக்கிரமமுடைய வம்சத்தரசர்கள் சார்வபௌமச்சக்கிரவர்த்திகளாய், காஞ்சிபுரம், மாமல்லபுரம் முதலிய இடங்களை இராஜதானி நகரமாகக்கொண்டு அரசாண்டுவந்தனரென்பதும், அக்காலங்களிற் சோழர்கள் தாழ்ந்த நிலைமையையடைந்து பல்லவர்கடகுக் கீழிருந்தார்களென்பதும் சிலாசாசனவாராய்ச்சியால் தெரிகின்றன. புறநாடுகளையும் வென்று தன்னாட்சிக் குட்படுத்திச் சிறப்புடன் அரசுவீற்றிருந்த வளவர்பெருமானாகிய செங்கணான் தன்னி ராஜ்யத்தைப் பல்லவர்கட் கிழந்து இக்காலத்துத் தாழ்ந்த நிலைமையிலிருந்தானென்று சொல்லற் கிடமில்லையாதலால் இவன் கி.பி.4-ம் நூற்றாண்டிற்கு முன்னரே யிருந்திருக்க வேண்டும். ஆனாற் செங்கணான் 'கி.பி. முதற் நூற்றாண்டிலிருந்த சோழன் கரிகாலனுக்குப் பிந்தியவனென்பது யாவருமறிந்த விஷயம். கரிகாலனுக்குப் பின்னர் நான்கு சோழமன்னர்கள் தொடர்ச்சியாய் ஆட்சிபுரிந்திருக்கின்றனர். ஒவ்வொருவனும் தனித்தனி