பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



இதுவேயாகும். பல்லவர்களது ஆளுகையும் தொண்டைமண்டலத்தில் கி.பி.880-ல் முடிவெய்தியது. ஆயினும் கி.பி.600 முதல் 880 வரை நிகழ்ந்த அவர்களது ஆட்சிக்காலம் தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் ஒரு சிறந்த பகுதியாகும். அக்காலத்தில் தமிழ்வேந்தர்களுள் ஒருபகுதியினராகிய சோழர்கள் தம்நாட்டை இழந்து தாழ்ந்த நிலையை எய்தினர். பல்லவர்கள் நெடுமுடி - வேந்தர்களாகவும் உள்நாட்டுத் தலைவர்களிடத்தும் திறைவாங்கும் பெருமையுடையவர் களாகவும் விளங்கினர். அவர்களது ஆட்சிக்காலத்தேதான் சைவசமய ஆசாரியர்களாகிய திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திகள் முதலான பெரியோர்களும், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் முதலான வைணவ சமய ஆசாரியர்களும் நம் தமிழகத்தில் வாழ்ந்தனர். ஆகவே அப்பெரியோர்கள் எல்லாம் அரிய பெரிய அற்புதங்களை நிகழ்த்திச் சைவ வைணவ சமயங்களை வேரூன்றுமாறு செய்து அவற்றை எங்கும் பரவச்செய்த ஒருகால விசேடமென்று அப்பகுதியைக் கூறுவது சாலப்பொருந்துமென்க. - இனி, ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பல்லவர்களது தொண்டை மண்டலம் பிற்காலச் சோழர்களுள் முதல்வனாகிய விஜயாலயனது புதல்வன் முதலாம் ஆதித்த சோழனால் வென்று கொள்ளப்படவே, பல்லவர்களும் குறு நில மன்னர் ஆயினர். தொண்டைமண்டலமும் சயங்கொண்ட சோழமண்டலம் என்னும் புதியதோர் பெயரைப்பெற்றது. அந்நாளில். சோழமன்னர்களுக்குத் திறை செலுத்திவந்த பல்லவகுலச் சிற்றரசர்களும் தலைவர்களும் தொண்டை மண்டலத்தில் பலபகுதிகளில் வசித்துவந்தனர். அவர்களுள் பெரும்பாலோர் சோழமன்னர்களின் அமைச்சர்களாகவும் படைத்தலைவர்களாகவும் நிலவியதோடு சில உண்ணாடுகளையும் தனியூர் களையும் ஆட்சிபுரியும் உரிமையும் பெற்றிருந்தனர். இங்ஙனம் வாழ்ந்து வந்த பல்லவகுலச் சிற்றரசர்களுள் சம்புவராயர் என்ற பட்டப்பெயருடன் விளங்கியவர்களும் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தனர் என்பது தெரிகிறது. இவர்களது ஆட்சிக்குட்பட்ட நிலப்பகுதி செங்கற்பட்டு, வடஆற்காடு ஜில்லாக்களைக் கொண்டுள்ளதாயிருந்தது. இவர்கள் சோழமன்னர் களுக்குத் திறை செலுத்தினர். கல்வெட்டுக்களால் அறிப்படும் சம்புவராய மன்னர்களுள் செங்கேணிமிண்டன் அத்திமல்லன் சம்புவராயன் என்பவனே மிகப் பழமையானவன். இவன் மூன்றாம் குலோத்துங்க சோழனது ஆட்சியின் 8-ஆம் ஆண்டில் (கி.பி. 1186) திருவல்லமுடைய மகாதேவர்க்குக் குற்றத் தண்டம், திரிசூலக்காசு இவற்றால் கிடைக்கும் வருவாய்களைக் கொடுத்தனன் என்று ஒரு கல்வெட்டுக் கூறுகின்ற து. (South Indian Inscriptions Vol.Ill No.60) இக்கல்வெட்டின் இறுதியில் செங்கேணிகள் வம்சம் உள்ளவரைக்கும்