61 மாலின் வடக்கடைய நிலம் நான்மாவரையில் (9) மேற்கடைய நிலம் இரண்டுமாக்காணியில் கீழ்க்கடை நிலம்... (10) அரைமா நீங்க இதன் வடக்கு நான்கிளி நல்லூர் கிழவன் நாயன் , வாழவந்த நாயன் தீபத்தரையர்பக்கல் (11) விலைகொண்டு உடையேனாய் என்னுதாய் இருந்த வெட்டுப்பாழ் நிலம் கானியும் சந்திராதித்தவரை...(12) திருநந்தவனம் ஆக்குவார்க்கு ஜீவனசேஷமாக விட்டேன் உடையார் திருவிசயமங்கை உடைய நாய (13) னார்க்குத் திருத்தொண்டத் தொகையன் திருமடத்து ஸ்தானபதி சுப்பிரமணிய சிவனேன் (14) இவை என்னெழுத்து - இவை பன்மாகேசுரரட்சை. சில குறிப்புக்கள் இவ்வேழு கல்வெட்டுக்களுள் முதல் ஆறு மதுராந்தக சோழன் காலத்துக் கல்வெட்டுக்களாகும். இம்மதுராந்தக சோழன் ஒன்பதாம் திருமுறையுள் 'மின்னாருருவ மேல்விளங்க' . என்று தொடங்கும் கோயிற்பதிகம் பாடியருளிய முதற்கண்டராதித்த சோழ தேவரது அருமைப் புதல்வன்; முதல் இராசராசசோழனது சிறிய தகப்பன்; கி.பி. 970-ஆம் ஆண்டு பட்டமெய்தி கி.பி. 985-வரை நம்சோழமண்டலத்தை ஆட்சிபுரிந்தவன். இவ்வேந்தனுக்கு உத்தம சோழன் என்ற வேறு பெயரும் உண்டு. அன்றியும், இவனுக்கு விக்கிரம சோழன் என்ற மற்றொரு பெயரும் இருந்திருத்தல் வேண்டும் என்பது இப்போது வெளியிடப்பெற்றுள்ள திருவிசய மங்கைக் கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. இவ்வேந்தனது ஆட்சியின் பத்தாம் ஆண்டாகிய கி.பி. 980க்கு முன்னரே, கோவந்தபுத்தூரிலுள்ள திருவிசய மங்கை என்னுந் திருக்கோயில் கற்றளியாக அமைக்கப் பெற்றிருத்தல் வேண்டும் என்பதை நான்காம் கல்வெட்டு உணர்த்துகின்றது. எனவே, இது முதலாம் இராசராசசோழனால் தஞ்சைமா நகரின்கண் எடுப்பிக்கப்பெற்ற 'இராசராசேச்சுரம்' என்னும் ஆலயத்தினும் பழமை வாய்ந்த கற்றளியாகும். மதுராந்தகசோழன் காலத்துக் கோயிலமைப்பு எங்ஙனம் இருந்தது என்று ஆராயப்புகுவார்க்கு இக்கற்றளி பெரிதும் பயன்படும். இதனை எடுப்பித்தவன் குவளாலமுடையான் அம்பலவன் பழுவூர் நக்கன் என்பான். இவன் மதுராந்தக சோழனது பெருந்திறத்து அதிகாரிகளுள் ஒருவன்; இவ்வேந்தனால் கொடுக்கப்பெற்ற ‘விக்கிரம சோழமாராயன்' என்னும் பட்டம் உடையவன். 'மாராயம் பெற்ற நெடுமொழி' என்னும் வஞ்சித்திணைக்குரிய துறை ஒன்றால் அரசர்கள் தம் அதிகாரிகளுள் தக்கோர்க்கு இங்ஙனம் பட்டம் அளித்துப் பாராட்டுவது பழைய வழக்கமென்பது அறியப்படுகின்றது. இனி, இவ்விக்கிரம சோழமாராயனது சிவபக்தியின் மாண்பு பெரிதும் போற்றத்தக்கது. இத்தலைவன் திருவிசய மங்கையைக் கற்றளியாக எடுப்பித்ததும் இத்திருக்கோயிற்கு ஆண்டொன்றிற்கு ஆயிரக்கல நெல் வருவாயுள்ள நெடுவாயில் ' என்னும் ஊரை நிபந்தமாக விட்டு