பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

முருகுசுந்தரம்




பொட்டும், கொண்டையிலே புதுக்கனகாம் பரப்பூவும்
பட்டும், கல்வைத்த பதக்கமும், முகப்பூச்சும்
கையில் கடிகாரம் கட்டிமணி பார்ப்பதுவும்
செய்ய வாய் திறந்து சிரிப்புமணி யடிப்பதுவும்
பைய நடப்பதுவும் பார்க்காமல் பார்ப்பதுவும்,
தொய்யில் எழுதுவதும் தோகையர்கள் நாங்களெலாம்
காதல் போருக்குக் கட்டும் படைக்கலன்கள்.
காதல் இலக்குக் கண்ணெதிரில் இல்லையென்றால்
மாதர் படைக்கலன்கள் மதிப்பிழந்து போகுமன்றோ?
பட்டங்கள் பெற்றாலும் பதவியிலே இருந்தாலும்
கட்டில் பதவியன்றோ கன்னியர்க்கு மேல்பதவி.
உணவில்லா விட்டாலும் உறங்கலாம்; கைப்பிடித்த
கணவன் விடுமூச்சு காதருகில் இல்லையென்றால்
தூக்கம் வருமா? துடிப்பார்கள் தோகையர்கள்!
எண்ணெ யில்லாமல் இயந்திரம் சென்றாலும்
கன்னியர் வண்டி காதலின்றி ஓடாது.


மோதும் அலைவைகை மூதூர் மதுரையிலே
காதலனை முதன்முதலில் கவியரங்கில் சந்தித்தேன்.
புத்தகம் வேண்டுமென்றான்; புத்தகத்தைநான்கொடுத்தேன்;
பேரூர் என்னவென்றேன்: ஆரூர் எனச்சொன்னான்.
கொய்யாக் கனியையின்று கொய்யவா எனக்கேட்டான்;
ஐயோ அதோவென்றன் அன்னையென்றேன் சென்றுவிட்டான்


அன்னை அழைத்தாள்; ஆரென் றெனைக்கேட்டாள்;
சென்னை அமைச்சர், சிரிப்பழகர் எனச்சொன்னேன்.