பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்தனப் பேழை

49




பெண்பார்க்க வரட்டும்; பேசலாம் எனச்சொன்னாள்.
கண்பார்த்துக் காத்திருந்த தோழியர்கள் ஓடிவந்து
வாழைக் குலையை வளைத்தபல மந்திகள்போல்
ஆளைக் குடைந்தே அப்பப்பா துளைத்துவிட்டார்.
நாக்கில் தேள் கொடுக்கை நட்டுவைத்த ஒருதோழி
'கார்குழலே! நீவிரும்பிக் காதலிக்கும் கண்ணனுக்கு
நாற்பதும் எட்டும் நடக்கின்ற வயதாமே'!
என்று மெதுவாக என் காதில் கிசுகிசுத்தாள்.


'இருந்தால் என்னேடி? இளங்கிளியே! சோலையிலே
முற்றிய செங்கரும்பில் முதிர்ந்த சுவைபெறலாம்;
முற்றாக் கொழுந்தாடை உப்புக் கரிக்காதோ?
நெற்றுக்காய் புளிக்குமடி; நிழலில் குடியிருந்து
முற்றும் கனிந்த மாம்பழத்தின் சுவைவருமா?
காளையை மணந்த கன்னியர்கள், நாள்தோறும்
ஆலைக் கரும்பாகி அலறுவதை அறியோமா?
காளை அணைப்பான்; கன்னத்திலும் அடிப்பான்.
வாலைக் குமரியே! வயதான கணவன்மார்
கண்ணாடிப் பாத்திரத்தைக் கையால் தொடுவதுபோல்
மெள்ளத் தொடுவார்கள்; மிக்கஅன் போடுநம்மைப்
பக்குவ மாகப் பழுதின்றிக் காப்பார்கள்.
காளை என்றால்நம் கைக்குள் இருப்பானா?
நடுவயதைத் தாண்டி நடக்கின்ற காதலனோ
படுவென் றால்படுப்பான்; எழுவென்றால் எழுந்திருப்பான்
தட்டின்றிச் செலவுசெய்யத் தகுந்த பெருநிதியும்
கட்டழகுக் காதலன் கடைக்கண் கருணையுமே