பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

அறிஞர் அண்ணா


வளர்த்துக் கொள்வது நல்லதல்ல. காகப் பட்டரை வரவழைத்து, அவர் கூறும் சடங்கு செய்து, நமது தலைவரை முடிசூட்டிக் கொள்ளச் செய்வதே முறை.

மோ : தளபதிகளே! மிக மிக சாமான்யக் குடியிலே பிறந்த சிவாஜி, ஒரு பெரிய அரசை, மராட்டிய சாம்ராஜ்யத்தைத் தன் தோள்வலிமையால் கண்டார். அவரது மின்னும் வாள் ஒளி வீசாத இடமில்லை. அவருடைய படையின் பரணி கேட்காத நாளில்லை. அவருடைய கண்ணோட்டம் அடிமைத்தனத்தைப் போக்கிற்று! காடுகளிலே கூடாரங்கள், மலைகளிலே கோட்டைகள், குகைகளிலே பாசறைகள். யாரால் ஏற்பட்டன? நமது இனத்தின் பங்கத்தைப் போக்கிய சிங்கத்தால். அந்தச் சிங்கம் சிலந்திக் கூட்டிலே கிக்குவதா? ஈட்டிக்கு மார்பு காட்டுகின்ற இணையில்லா வீரன், உலர்ந்த சருகு கண்டு உடல் துடிக்க நிற்பதா? மார்பு வாள் வடுவுடன் விளங்க, மராட்டியத்திலே மண்ணோடு குருதி கலந்து குழைய, மராட்டியக் குடும்பங்களிலே தாய்மார்கள் கோவெனக் கதற, போரிட்டு நிறுவியது மராட்டிய சாம்ராஜ்யம். மலை, காடு, நதி, படை எதுவும் தடுக்கவில்லை சிவாஜியை! ஆனால் ஆரியர்கள் தடுக்கின்றனர். எவ்வளவு விசித்திரம். வேதனை தரும் விசித்திரம். கூண்டிலே சிக்கிய புலி, தூண்டிலிலே சிக்கிய மீன், வலையிலே வீழ்ந்த மான், வர்ணாஸ்ரமத்திலே வீழ்ந்த வீரன் - இந்த வேதனை தரும் காட்சியையா நாம் காணவேண்டும்? ஐயோ, மராட்டியமே! உன் நிலை இப்படியா குலைய வேண்டும்? ஒரு சிறு கூட்டத்திடம் சிக்கிச் சீரழிகிறாயே.

சிவா : மக்களின் மனப்போக்கைக் கவனிக்க வேண்டாமா?

மோ : மக்களின் மனம்! தாங்கள் வீரமாகக் கிளம்புவதற்கு முன்பு மக்களின் மனம் 'இனி என்றென்றும் நாட்டிற்கு விடுதலை கிடையாது; விடுதலை பெற முடியாது' என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தனர். போரிடக்