பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

அறிஞர் அண்ணா


புரந்தர். எதிரியே ஆச்சரியம் அடையும்படியான அபார வீரத்துடன் வெற்றி பெற்ற ராஜகிரி, மராட்டிய கீர்த்தியின் உறைவிடம் போலுள்ள கல்யாண்... கோட்டைகள் வெற்றியின் சின்னங்கள்; வீரத்தின் அறிகுறிகள்; அந்த சிவாஜியா நான்? அஞ்சா நெஞ்சன் எங்கே? பஞ்சையிடம் பணியப்போகும் நான் எங்கே? ஒழிந்தது! அந்த சிவாஜி மங்கிவிட்டான்! எதற்கும் அடிபணியும் சிவாஜி உலாவுகிறான். தோர்ணா! புரந்தர்! ராஜகிரி! என் கண்முன் இருக்க வேண்டாம்.

(கோட்டைகளை உடைத்து)

சிதறுகின்றன சிறுசிறு துண்டுகளாக. வீரத்தின் சின்னங்கள். என் மனக்கோட்டை பொடிப் பொடியாகிறது.

(மௌனமாக உலவிவிட்டு)

சந்திரமோகா! நீ எல்லாம் அறிந்திருக்கிறாய்! வெட்டு ஒன்று; துண்டு இரண்டாகப் போகிறாய்; வீரன். ஆனால் என் நிலையை மட்டும் உணரவில்லை. ஒரு வினாடியில் 'காகப்பட்டர் வேண்டாம், மகுடாபிஷேகம் இன்று நடக்கும்' என்று உத்தரவு பிறப்பித்து விடலாம். மராட்டியம் மறுக்காது. ஆனால் மறுகணம் முதல் என்ன நடைபெறும்? இந்த மண்டலத்திலும், வேறு பல மண்டலங்களிலும் ஆஸ்ரமவாசிகள் ஆரம்பிப்பர் தமது பிரச்சாரத்தை. 'மராட்டிய மண்டலாதிபதி சாஸ்திர விரோதி! சம்பிரதாய வைரி! சனாதனத்தைக் கெடுத்தவன்! அவனுடைய ராஜ்யம் பாவ பூமி' என்று கூறுவர். அவர்கள் பூதேவர்கள்! மக்கள் அப்படித்தானே எண்ணுகிறார்கள். அந்த மக்கள் பிறகு மராட்டிய மண்டலத்தை உள்ளிருந்து கெடுத்துவிடுவர். நான் இன்று பட்டாச்சாரிக்குப் பணியாவிட்டால், அந்தப் பாதகர்கள் பாமரரை நாளை என் மீது ஏவிவிடுவர். மராட்டியனைக் கொண்டே மராட்டியனை அழிப்பர். பரத கண்டம் முழுவதும் 'சிவாஜி நீச்சன், சாஸ்திர சம்மதமில்லாது ராஜ்யம் ஸ்தாபித்தான். அவனுக்குச் சர்வநாசம்