பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

101


சம்பவிக்கும்.' - இமயம் முதல் குமரி வரை எனக்கு எதிர்ப்பு, ஏளனம் கிளம்பும். என்ன செய்வேன்? மராட்டியத்தை அவர்கள் சும்மாவிட மாட்டார்களே. ஒருபுறம் வெளிநாட்டார் எதிர்ப்பு; வேறொருபுறம் வேறு வேந்தர்களின் எதிர்ப்பு! மராட்டியத்திலேயே எதிர்ப்பு. எத்தனை கணைகளைத்தான் மராட்டிய மாதா தாங்குவாள். மோகன்! நான் பணிந்துதான் ஆகவேண்டும்; வீழ்ச்சிக்குத் தான்? ஆனால் வேறு வழியில்லை; வேறு வகையில்லை.

காட்சி - 22

இடம் : ஆஸ்ரமம்

உறுப்பினர்கள் : காகப்பட்டர், ரங்குபட்டர்.

காகப் : காடு, மேடு என்று பாராமல் களத்திலே நின்று போரிட்டான். ஆனால் நமது காலடியில் வீழ்ந்தால் தான் ராஜ்யம் அவனுக்கு ரங்கு! என்னடா சொல்றே இப்போ?

ரங்கு : சொல்றதா? ஆனந்தத் தாண்டவமாடலாமான்னு தோன்றது, குருதேவா, நினைக்க நினைக்க நேக்கு ஆச்சர்யமாய் இருக்கு. புனா எங்கே இருக்கு? காசி எங்கே இருக்கு? மண்டலம் அங்கே இருக்கு. ஆனா அதை....

காகப் : பரிசுத்தமாக்க இங்கே நம்மிடமிருக்கும் கமண்டல தீர்த்தம் தேவைப்படுகிறது.

ரங்கு : ஆச்சர்யமா இருக்கு ஸ்வாமி!

காகப் : ஆரிய யோகத்தின் அற்புத சக்தியைப் பாரடா அசடே.

ரங்கு : ராஜ்யம் சம்பாதிக்க அவன் பட்டபாடு எவ்வளவு? கொட்டிய ரத்தம் எவ்வளவு?

காகப் : மாவீரன்! மராட்டியத்தைப் பிழைக்க வைத்த வீரன் என்று மண்டலமெல்லாம் புகழ்கிறதாம் அவனை. அவன், அசட்டு ரங்கு! அந்த வெற்றி வீரன் இந்த வேதிய குலத்தினிடம் தஞ்சம் புகுந்தாக வேண்டி வருகிறது. தெரிந்து கொள்ளடா தெளிவற்றவனே.