பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

அறிஞர் அண்ணா



காட்சி - 23

இடம் : வீதி

உறுப்பினர்கள் : சிட்னீஸ், வீரர்கள்.

சிட்னீஸ் : வீரர்களே! காசிவாசி காகப்பட்டருக்கு அமோகமான வரவேற்பு நடத்த வேண்டும்; திருவிழா போல இருக்க வேண்டும்; எங்கு பார்த்தாலும் மகர தோரணங்கள். கொடிகள் அசைந்தாடியபடி இருக்க வேண்டும். அவரை வரவேற்பு செய்வதைப் போல் ஆலயங்களில் எல்லாம் பூசை! சத்திரம், சாவடிகளி லெல்லாம் சமாராதனை நடத்த வேண்டும்.

1. வீர : தேவேந்திர பட்டணம் போல் சிங்காரித்து வைத்திருக்கிறோம் நகரத்தை.

சிட் : காகப்பட்டரின் வரவேற்பு வைபவத்திலே சங்கீத வித்வான்கள் இருக்க வேண்டும். கவிவாணர்கள் இயற்றும் புதிய கவிதைகளை அவர்கள் இனிய இசையுடன் சேர்த்துப் பாட வேண்டும்.

2. வீர : குறைவில்லாதபடி ஏற்பாடு செய்துவிடுகிறோம்.

சிட் : முக்கியமான விஷயம். பிராமணர்களிடம் மிகவும் பயபக்தி விசுவாசத்துடன் மக்கள் நடந்துக் கொள்ள வேண்டும் அவர்கள் மனம் கோணும்படி யாரும் நடந்து கொள்ளக் கூடாது. வருகிறவன் காகப்பட்டர். ஆரியகுலத்தலைவர். ஆகவே ஆரியர்களிடம் தனியான அக்கரை அவருக்கு இருக்கும். அதை அறிந்து நடந்த கொள்ள வேண்டும்.

1. வீர : ஆகட்டும்! எங்களால் ஒரு தகராறும் வராது.

சிட் : காகப்பட்டரின் மனம் மகிழ வேண்டும். மகுடாபிஷேகம் நடைபெற்று மாவீரன் சிவாஜி மகாராஜனானால்தான் மராட்டியமும் மகிழும் பரதகண்டமும் பூரிப்படையும். ஆகவே இந்த வரவேற்பைப் பொருத்திருக்கிறது மராட்டியத்தின் எதிர்கால வாழ்வு. இதையறிந்து காரியங்களைக் கவனியுங்கள். போய்வாருங்கள்.