பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

அறிஞர் அண்ணா


வணங்கினவா ஒவ்வொருவனும் சாமான்யனில்லை. அசகாய சூரர்கள். யுத்தத்திலே ஜெய வீராளா இருப்பவர். அவாளுடைய அதிகாரமும் கீர்த்தியும் அமோகம். ஆனால் நமது அடி பணிந்தார் பார்த்தாயல்லவா?

ரங்கு : தேவ தேவனைத் தொழும் பக்தனைப் போல் அல்லவா ஸ்வாமி அவர்கள் நடந்து கொண்டார்கள்!

காகப் : இதில் என்னடா ஆச்சரியம்? நாம் யார். பூதேவா! அவர்கள் சூத்திரர்கள். மனுவின் வாக்கியப்படி நமக்குச் சேவை செய்யவே பூலோகத்தில் பிறந்தவர்.

ரங்கு : மனு நமக்காகச் செய்திருக்கும் ஏற்பாடு மகா மகத்துவம் வாய்ந்தது.

காகப் : சந்தேகமென்ன. சரி இனி இந்தப் பிராயச்சித்தக் காரியப்படி இரண்டு முக்கிய விஷயங்கள் பூர்த்தியாக வேண்டும்.

ரங்கு : அவைகள்?

காகப் : ஒன்று வீராதி வீரனானாலும் விற்பன்னருக்கு அடங்கியே தீர வேண்டும் என்ற கொள்கையை நிலை நாட்ட வேண்டும். சிவாஜி என்னிடம் ஆசி பெற்று, அனுமதி பெற்று, அடிபணிந்த பிறகே சிம்மாசனம் ஏறுவான். ஆகவே அந்த அபிலாஷை சித்தியாகும்.

ரங்கு : மற்றொன்று?

காகப் : நமது ஆரியச் சோதறாளுக்கு இந்தச் சமயத்திலே கூடுமான சகாயம் செய்ய வேண்டும்.

ரங்கு : எப்படி ஸ்வாமி, அது சாத்தியமாகும்?

காகப் : எப்படி ஆகாமல் போகிறது பார்ப்போம். நீ போய் வெளியே இரு. அந்தத் தளபதியை வரச்சொல்!

(ரங்கு போகிறான்)

(சிவாஜி வரக்கண்டு காகப்பட்டர்)