பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

அறிஞர் அண்ணா


சிருஷ்டித்தான். அயன் படைப்பு நாலு ஜாதி. நான்முகனுடைய முகத்திலே தோன்றியோர் முப்பிரி தரித்த பூசுரர். தோளிலே தோன்றியோர் க்ஷத்திரியர். வைசியர் தொடையிலே தோன்றினர். பிரம்மனின் பாதத்தில் தோன்றியோர் சூத்திரர். பிரமகுலம் தேவ தூதராகவும், க்ஷத்திரிய குலம் அரச சேவை செய்துக் கொண்டும், வைசிய குலம் செல்வத்தைச் சேகரிக்கும் சேவை செய்துக் கொண்டும் வாழ வேண்டும். சூத்திர குலம் பிரம்ம குலத்துக்குத் தாசராகி சேவை செய்து வரவேண்டும். இது பிரம்மன் கட்டளை.

சிவா : காலிலே தோன்றியதாலா இந்தக் கடும் தண்டனை? காடு, மேடு திருத்திக் கழனியாக்கி நாடு வாழ் நற்பணி புரியும் எங்களுக்கு?

காகப் : தண்டனை என்று கூறுவது தவறு; தீர்ப்பு! தேவ கட்டளை; ஆண்டவன் ஆணை; தேவ சாஸ்திர விதி; குலதர்மம்.

சிவா : நல்ல தர்மம்! நல்ல கட்டளை! நல்ல ஆணை!

காகப் : சிவாஜி! என்னிடம் தர்கிக்கவா துணிகிறாய்?

சிவா : நான் தர்கிக்கவில்லை; சந்தேக விளக்கம் கேட்டேன்.

காகப் : சாஸ்திரத்தை சந்தேகிப்பதே பாவம். தெரியுமா உனக்கு? அது கேவலம் நாஸ்திகாளின் செயல். நாஸ்திகாளுக்கு என்னநேரிடும் தெரியுமா? ரௌரவாதி நரகம் சம்பவிக்கும்.

சிவா : அது. இறந்த பிறகுதானே?

காகப்: ஆமாம்! இங்கேயும் உண்டு இம்மை.

சிவா : நான் பாடுபட்டேன். அதன் பலனை அனுபவிக்க நினைப்பது தவறா? பாவமா? அரசு அமைத்தேன், வாள் பலத்தால்! ஆள்வதற்கு மட்டும் ஆரிய பலம் வேண்டுமா என்று கேட்கின்றனர்.