பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

111


காகப் : நீயேதான் கேளேன்! அதனால் என்ன? சிவாஜி வீரன்தான். போர் பல கண்டவன் தான். எதிரியின் மண்டைகள் சிதற, மலைகள் அதிரபோரிட்டவன் தான். ஆயினும் என்ன? அவன் பூசுரனல்லவே. நமது மதக் கோட்பாட்டின் படி க்ஷத்திரியனே மன்னனாக முடியும். சூத்திர சிவாஜி எங்ஙனம் முடிசூட முடியும் என்று நான் கேட்டதாக நீ கேள்.

ஆட்சிக்கு வருவதென்பது அவ்வளவு கடினமானதல்ல. சதிபல புரிந்து, வாரிசுகளைச் சிதைத்துப் பலர் மன்னராயினர். மன்னரை மயக்கி ஒழித்து, மத்திரிகள் பலர் முடி சூடினர். மன்னரையும், மந்திரியையும் ராணுவத்தைக் காட்டி பிரட்டி, படைத்தலைவன் பீடத்தில் அமர்ந்திருக்கிறான்.

சிவா : நான் சதி செய்தல்ல ராஜ்யம் பெற்றது. வீர வெற்றிகள் பெற்றிருக்கிறேன்.

காகப் : நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆகவே தான் சூத்திர குலத்தில் பிறந்தாலும் உன்னை க்ஷத்திரியனாக்கத் தீர்மானித்திருக்கிறேன். உனக்குப் பெருமை தந்தேன்.

சிவா: அந்தப் பெருமையை என் தளபதிகள் உணரவில்லை.

காகப் : சிவாஜி! நீ க்ஷத்திரியனாக்கப்பட்டால் தான் பரத கண்டம் முழுவதும் உள்ள பிராமணோத்தமர்கள் உன்னை ஆசீர்வாதம் செய்வர். அந்த ஆசிர்வத பலம் இல்லாத அரசு ஆண்டவனால் அழிக்கப்பட்டு விடும். இதற்கு ஆதாரம் சாஸ்திரம். மூலம் வேதம், வேதம் அனாதி காலத்தது. தேவன் தந்தது. அதன் பாஷ்யம் கூறும் அருகதை பெற்றவரே ஆரியர். ஆரியர் பூதேவர்.

(சிவாஜி உலவ)

சிவாஜி! சாஸ்திரத்தின்படி நடக்கச் சம்மதம் இல்லாவிட்டால் கூறிவிடும். என் காலத்தை வீணாக்காதே. எனக்கு வேலை இருக்கிறது.

சிவா : உமது யோசனையை ஏற்க மறுத்தால்?