பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

113


காகப் : பரத கண்டத்திலே பல பாகங்களிலிருந்து பிராமணோத்தமர்களை வரவழைத்துச் சமாராதனை நடத்தி தட்சணை தரவேண்டும்.

சிவா : சாஸ்திர விதிப்படிதானா அதுவும்?

காகப் : ஆம்! தானாதி காரியமூலம் ஆசிர்வாதம் பெற்று உன் பாவத்தை நீ கழுவிக் கொள்ள வேண்டும்.

சிவா : பாவமா? எனக்கா? நான் வஞ்சிக்க வில்லையே. பொய்யனல்லவே. புரட்டனல்லவே?

காகப் : நீ பஞ்சமா பாதகத்திலே மிஞ்சியதாம் கொலை பாதகத்தைச் செய்தவன்.

சிவா : யாரை?

காகப் : களத்திலே பலரை.

சிவா : சரி! பிறகு நடக்க வேண்டியதைக் கூறும்.

காகப் : ஹோமம்.

சிவா : விறகு, நெய்.

காகப் : மலை உயரம் விறகு; மடு ஆழம் நெய்.

சிவா : பிறகு?

காகப் : துலாபாரம்.

சிவா : துலாபாரமா?

காகப் : ஆம்! உன் எடைக்கு எடை நவரத்தினங்கள், தங்கம், வெள்ளி முதலிய உலோகங்கள், பட்டு முதலியன நிறுத்தி தானம் செய்ய வேண்டும்.

சிவா : யாருக்கு? ஏழைகளுக்கா?

காகப் : இல்லை... பிராமணர்களுக்கு.

சிவா : மராட்டியர் ராஜ்யம் சம்பாதிக்க உழைத்தனர்; பிராமணர்கள் பட்டாபிஷேக வைபவத்திலே உண்டு களிப்பதா? இது எந்த வகையான நியாயம்?