பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

அறிஞர் அண்ணா


காகப் : சாமான்யாளுக்கும் தெரியாத நியாயம் இது. இது நியதி. சாஸ்திரம்.

சிவா : இவைகளுக்குப் பிறகு?

காகப் : பூணூல் தரிக்கப்படும். பூபதி ஆகலாம்.

(ஆட்களை அழைத்து)

சிவா : இவர் கட்டளைப் படி நடவுங்கள்.

காகப் : சிவாஜி நீ இன்றே புறப்பட்டுப் போய் திவ்ய க்ஷேத்திரங்களைத் தரித்து, ஆங்காங்கு அர்ச்சனைகள் செய்துவிட்டு வரவேண்டும். அதற்குள் நான் இங்கு ஆக வேண்டிய ஆரம்பச் சடங்குகளைச் செய்து வைக்கிறேன்.

சிவா : அவ்விதமே செய்கிறேன். திவ்ய க்ஷேத்திரங்களிலே என்னென்ன வகையான பூஜைகள் செய்ய வேண்டும்?

காகப் : பூஜைகள் இஷ்டம் போல் செய்யலாம். அந்தந்த திவ்ய க்ஷேத்திரங்களிலும் அனுஷ்டிக்க வேண்டிய பொதுவான ஒரு பூஜை முறை இருக்கிறது.

சிவா : என்ன ஸ்வாமி அது?

காகப் : பிராமணனுக்குத் தானம் செய்வது விட்டலன் கோயிலானாலும், விநாயகர் ஆலயமானாலும், வேலேந்தி கோயிலானாலும், திரிசூல கோயிலானாலும், கோயிலுள்ள மூர்த்தியாக இருப்பினும் பிராமணனுக்குத் தானம் தர வேண்டும். கோயிலைப் பற்றிய வித்தியாசம் பார்க்காமல்.

சிவா : சென்று வருகிறேன். குருஜீ....

காகப் : போய் வா! போ போ, புண்ணியத்தைத் தேடு.

(சிவாஜி போகிறான்)

(சிவாஜி போன பிறகு ரங்கு வருதல்)

ரங்கு : குருதேவா! இந்த மண்டலத்துக்கு முதல் அமைச்சராம்! நம்மளவராம்... தங்களைக் காண....