பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

119


ரங்கு : ஆமாம்... ஏற்பாடாச்சு.

காகப் : கைகேயி செய்த காரியத்தாலே தடைப்பட்டு, ஸ்ரீராமச்சந்திரர் கானக வாசத்துக்குக் கிளம்ப நேரிட்டு விட்டதே! அப்போ அவரோடு கூடவே போயாகணும்னு சீதாப் பிராட்டியாரும், கிளம்பற போது, என்னடா நடந்தது?

ரங்கு : ஸ்ரீராமச்சந்திரர் வைதேகி கானகத்திலே கொடிய துஷ்ட மிருகங்களெல்லாம் உலவும். நீ வரப் படாதுண்ணு..."

காகப் : மண்டு! அந்தக் கட்டத்தைத் தாண்டுடா சீதாப்பிராட்டியாரைத் தன் கூட அழைச்சிண்டு போக ராமபிரான் சம்மதித்து விடுகிறார். பிறகு. அதற்குப் பின்னாலே...

ரங்கு : ஊர் முழுதும் புலம்பறது.

காகப் : தேசம் பூராவும்தானே அழறது. எவ்வளவு சோகமான கட்டம். பட்டத்துக்கு வர வேண்டிய இளவரசன் ராமபிரான். அதே நாளிலே, அரண்மனை நந்த வனத்திலே உலவ வேண்டிய ராணியை அழைச்சுண்டு ஆரண்யம் போறதுண்ணா அதைவிடச் சோகமான - துக்கமான சம்பவம் வேறே இருக்க முடியுமா?

ரங்கு : முடியாது ஸ்வாமி! முடியாது. இப்ப கூட பக்தா இந்தச் சம்பவத்தைப் படிச்சா கதற்றாளே.

காகப் : அப்படிப்பட்ட சமயத்திலே ஸ்ரீராமச்சந்திரர் சீதாப்பிராட்டியாரைப் பார்த்து, திருவாபரணங்களை எல்லாம் கழற்றி பிராமணாளுக்குத் தானம் செய்துட்டு வாண்ணு சொன்னாரடா. எப்படிப்பட்ட சமயம்! ஊரே புலம்பிண்டிருக்கு. சீதாப்பிராட்டியாருக்கும் ராம பிரானுக்கும் பதினான்கு ஆண்டு கானக வாசம். அப்படிப்பட்ட கஷ்ட காலத்திலேயும் பிராமணாளுக்குத் தனம் கொடு, ஆபரணங்களைக் கழற்றிக் கொடுண்ணு சீதாப்பிராட்டியாருக்கு ராமபிரான் சொன்னதாகவும்,