பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

அறிஞர் அண்ணா


சீதாப்பிராட்டி அது போலவே செய்ததாகவும் ராமாயணம் சொல்றது! அசட்டு ரங்கு! நீ ராமாயணத்தைப் பாராயணம் செய்ததாகவும் சொல்றே. இந்த சிவாஜி செய்த தானாதிகளைப் பார்த்து, ஒரே ஆனந்தக் கூத்தாடுகிறாயே. ஆரண்யம் போகும் பொழுது அழுத கண்ணோடு இருந்த சீதா தேவியே பிராமணாளுக்குத் தானம் செய்திருக்கா. பட்டத்துக்கு வரப்போகிற சிவாஜி தானம் கொடுக்கிறதிலே என்னடாப்பா ஆச்சரியம்? சமயம் எதுவாக இருந்தாலும், ஆனந்தமோ, துக்கமோ, எப்படிப்பட்ட சமயமானாலும் பிராமணாளுக்குத் தானம் தர வேணுமடா, அதுதானே சாஸ்திரம்? சந்தோஷமான சமயத்திலே தானம் தருகிறாண்ணா அவாளோட சந்தோஷம் பல மடங்கு அதிகமாக வேணும்னு அர்த்தம். இதெல்லாம் நம்ம சாஸ்திரத்திலே இருக்குடா.

ரங்கு : இருக்கு ஸ்வாமி, இருக்கு.

காகப் : ரங்கு! ஒரு யோசனை. அபூர்வமான யோசனை உதிச்சிருக்கு. எடு, சுவடிகளை; கொடு இப்படி.

(ரங்கு சுவடிகளைக் கொடுக்க, காகப்பட்டர் அதை வீச. ரங்கு எடுக்க)

டே மண்டு! அவைகள் அங்கேயே கிடக்கட்டும். ஓடு போய் அந்த சிட்னீஸை வரச்சொல் உடனே.

(ரங்கு போதல்; சிட்னீஸ் வருதல்)

வாப்பா சிட்னீஸ்.

சிட் : குருஜி ஏன் முகவாட்டமாய் இருக்கிறீர் ஏடுகள் ஏன் இப்படி?

காகப் : ஏடுகள் என்னை வாட்ட, அவை போதும்டாப்பா சிட்னீஸ்! தேடித் தேடிப் பார்க்கிறேன். தெளிவு இல்லை; திகைப்புத்தான் அதிகமாயிண்டிருக்கு.

சிட் : எதற்கு ஸ்வாமி?