பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

அறிஞர் அண்ணா


புண்ணியமா? என்றெல்லாம் எண்ணிக் குழப்பம் அடையறே. சிவாஜி நம்முடைய உயிர்த் தோழனா யிற்றே, அவனுக்குத் துரோகம் செய்யலாமான்னு எண்ணித் திகைப்பு அடையறே. குருக்ஷேத்திர பூமியிலே இதே நிலை அர்ச்சுனனுக்கு ஏற்பட்டது. காண்டீபத்தைக் கீழே போட்டேவிட்டான். பரந்தாமன் சொன்னார் 'பார்த்திபா! அண்ணன் தம்பிகள் என்றும், பந்து மித்திரர்கள் என்றும் எண்ணிக் கலங்காதே, என் மேலே பாரத்தைப் போட்டுவிடு. ஆரம்பி யுத்தத்தை' என்று. கீதா வாக்கியம் தெரியுமா சிட்னீஸ் உனக்கு? என் மீது பாரத்தைப் போட்டுவிட்டு தைரியமாகச் சம்மதித்துவிடு.

சிட் : வேதியரே! எனக்கு உம்மைப் பார்க்கவும் கூசுகிறது.

காகப் : முட்டாளே! முடியடா முடி! மராட்டிய மண்டலத்தின் மணிமுடி. சாம்ராஜ்யம், செங்கோல், சிம்மாசனம், ராஜயோகம்! மன்னனாக வேண்டிய சிவாஜியும், அவனைச் சேர்ந்தவாளும் எதிர்ப்பாரே என்ற பயமா? நானிருக்கப் பயமேன்? நாட்டு மக்களைக் கூட்டி உன் பக்கம் நிற்கச் செய்கிறேன்.

சிட் : போதுமையா உமது போதனை. சிங்கத்தின் உணவைத் திருடும் சிறு நரி என்று எண்ணினீரோ என்னை?

காகப் : நரிக்குப் புத்தி உண்டு! நீ மகா மண்டு! போடா.

சிட் : உம் எதிரே நிற்பது கூடப் பாபம். என் வாழ் நாளில் நான் இப்படிப்பட்ட வஞ்சகத்தைக் கண்டதே இல்லை.

(போகிறான்; ரங்கு வருதல்)

ரங்கு : என்ன ஸ்வாமி இது? புயல் கிளப்பி விட்டீரே?

காகப் : புயல் என் கோபம்; தென்றல் என் சிரிப்பு; மண்டலம் நம் கமண்டலத்துக்குள் அடக்கம்.

ரங்கு : ஸ்வாமி! சிட்னீஸ் உம்முடைய திட்டத்தை ஏற்றுக் கொள்ளமாட்டேன்னு பிடிவாதமா சொல்லி விட்டானே?