பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

அறிஞர் அண்ணா


கேசவ : எந்த மோரோபந்த்?

பால : நம்மவர்தான் ஓய்!

கேசவ : நம்ம குலந்தான். ஆனால் அவர் இப்போ சிவாஜியினிடமல்லவா வேலை செய்துண்டிருக்கிறார்? முதன் மந்திரி ஸ்தானமல்லவோ வகிச்சிண்டிருக்கிறார். அவர் சிலாஜியின் சார்பாகத்தான் பேசுவார். அவன் பட்டாபிஷேகம் செய்து கொள்வது சாஸ்திர சம்மதமான காரியம்ணு பேசுவார்.

பால : அசட்டுத்தனமான முடிவுக்கு அவசரப்பட்டு வராதீர். மோரோபந்த் சிவாஜியிடம் பெரிய உத்தியோகம் பார்த்துண்டு வருபவரானாலும், நம்ம அவர் குலம். நம்மவா எங்கே இருந்தாலம் குல ஆச்சாரத்தையும், அவர் அந்த ஆச்சாரத்துக்கு ஆதாரமாய் இருக்கிற சாஸ்திரத்தையும் ஒருநாளும் அழிஞ்சு போகப் பாத்திண்டிருக்க மாட்டா. வேணுமானாப் பாரும். அதோ, அவரே வந்துவிட்டார். வரணும்... வரணும்!

மோரோ : ராம் ராம்!! என்ன பாலச்சந்திரபட்டர் வாள். ஒகோ! கேசவப்பட்டரா? ஆமாம்; என்ன கோபமாகப் பேச்சுக்குரல் கேட்டதே?

கேசவ : பேச்சுக் குரல்தானே? இனி அதிக நாளைக்கு இராது. நிர்ச்சந்தடியாகிவிடும். ஸ்மசான சந்தடி இருக்கும். கவலைப்பட வேண்டாம்.

மோரோ : என்ன, கேசவப்பட்டரே! ஏதோ வெறுப்படைந்தவர் போலப் பேசறேளே?

கேசவ : வெறுப்பில்லை ஸ்வாமி, வெறுப்பில்லை! வேதனை தாங்க முடியாத வேதனை. வேதம் நாசமாகிறது. வேதியர்கள் வகுத்த விதிமுறைகள் நாசமாகின்றன. சாஸ்திரம் அழிகிறது; தர்மம் அழிகிறது. வேதனையில்லாமலிருக்குமோ?