பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

47


மோரோ : எதைக் குறித்துப் பேசுகிறீர், இவ்வளவு ஆக்ரோஷத்தொடு?

கேசவ : ஆக்ரோஷமா? இதுவா? மோரோபந்த் மோரோபந்த் நீர் ஞானசூன்யரல்ல. நமது குலதர்மம், குலப்பெருமை அறியாதவரலல்ல.

மோரோ : அறிந்திருக்கிறேன். அதனால் என்ன ஸ்வாமி, அடேடே! அதைச் சொல்கிறீர்களா?

கேசவ : அதென்ன ஸ்வாமி, அவ்வளவு சாதாரணமாகப் பேசுகிறீர், சர்வ நாசம் சம்பவிக்கும் காரியமல்லவா அது. சிவாஜி என்ன குலம்? அந்தக் குலத்துக்கு என்ன கடமை? க்ஷத்திரிய குலமல்லவா அரசாளலாம். ராஜ்யாபிஷேகம் உண்டு.

மோரோ : க்ஷத்திரியனுக்குத்தான் சிவாஜி முயற்சிக்கிறான்.

கேசவ : நீர் பார்த்துக் கொண்டு இருக்கிறீர். மார்பிலே முப்பிரியும் இருக்கிறது. அறிந்து பயன்? செந்தாமரை நிறைந்த தடாகத்திலே முரட்டு எருதுகள் இறங்கி தாமரையைத் துவம்சம் செய்வதைப் பார்த்தும், அதைத் தடுக்காமல் இருந்து கொண்டே, தாமரையின் அழகு நேக்கு நன்னா தெரியுமேன்னு பேசிண்டிருந்தா போதுமா? புத்திமான் செய்கிற காரியமா இது?

மோரோ : நீர் எதைக் குறிப்பிடுகிறீர்?

கேசவ : உம்மகன் எதிரிலேயே நம்ம சாஸ்திரம் நாசமாவறதைத்தான் குறிப்பிடுறேன். சிவாஜி பட்டாபிஷேகம் செய்துக் கொள்ளப் போறானாமே?

மோரோ : பைத்தியக்காரர் பார்த்துக் கொண்டு சும்மாவா இருப்பேன்? நேக்கு தெரியாதா, வேதாச்சாரம் கெடக்கூடாது என்கிற விஷயம்.

கேசவ : அப்படியானா தடுத்தீரோ?