பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

அறிஞர் அண்ணா


மோரோ : கண்டிப்பாக! பட்டாபிஷேகத்தை சாஸ்திர விதிப்படி செய்துக் கொள்வது மகாபாவம். அந்தப் பாவகாரியத்துக்கு நான் உடந்தையாய் இருக்க முடியாது. தடுத்தே தீருவேன். எதிர்த்தே தீருவேன் என்று தெளிவாக, தீர்மானமாகக் கூறியாகிவிட்டது.

பாலச் : பார்த்தீரா, ஓய்!... நான் சொன்னேனல்லவா.

(கேசவப்பட்டர் மேரோவைத் தழுவி)

கேசவ : க்ஷமிக்கணும் ஸ்வாமிகளே! ஆத்திரமாகப் பேசிவிட்டேன். தங்கள் குலப்பெருமையை உணராமல். தடுத்தீரோ? ஆரிய குல ரட்சகர் நீர். வேதாகம பாதுகாவலர் நீர்.

மோரோ : இது கலிகாலம். கலிகால தருமப்படி இப்போது பூலோகத்திலே க்ஷத்திரிய குலமே கிடையாது என்று கூறினேன்.

கேசவ : ஆதாரம் என்ன கூறினீர்?

மோரோ : ஏன், அந்தக் காலத்திலேயே பரசுராமர் க்ஷத்திரியப் பூண்டையே அழித்து விட்டாரே. க்ஷத்திரியர் ஏது இப்போது என்று கேட்டேன். சிவாஜிக்குப் பட்டம் சூட்டுவது என்பதற்கு எந்த சனாதனியும் சம்மதிக்க முடியாது என்று கூறிவிட்டேன். ஆகையாலே ஆத்திரப்பட்டு ஏதேதோ கூவிண்டிருக்க வேண்டாம். நமது ஆரிய சோதராளிடம் பேசி இது விஷயமாக, அனைவரையும், ஒன்று திரட்டும். சிவாஜி சம்மதம் கேட்டு அனுப்புவான். 'முடியாது' என்று ஒரேயடியாய்க் கூறிவிடும்.

கேசவ : ஆஹா! இப்போதே கிளம்புகிறேன்! நம்ம சோதராளிடம் சொல்கிறேன் விஷயத்தை. சூட்சமமா இரண்டொரு வார்த்தை சொன்னாக்கூட புரிந்து கொள்வாளே நம்மளவா.