பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

அறிஞர் அண்ணா


சிட்னீஸ் : உண்மையாகவேதான் சுவாமிகளே! உம்ம சகாயம் வேண்டும்.விஷயம் உமக்குத் தெரிந்தது தான். வீணாக நாம் விவாதிக்கணுமா? சிவாஜி பட்டாபிஷேகம் சம்மந்தமாக தாங்கள் எதிர்க்கிறீர்களாம். நல்ல காரியத்தை, நாடு முழுதும் விரும்புகிற காரியத்தைக் கெடுக்கலாமா? சிவாஜி தர்மிஷ்டர்; உமக்கே தெரியும். வீரர் அதனால்தான் நாம் வாழுகிறோம். இப்போது நம் நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது. அப்படிப்பட்டவருடைய பட்டாபிஷேகத்தைத் தடுப்பது சரியா, தர்மமா, நியாயமா?

கேசவ : ஏம்பா சிட்னீஸ். எனக்கும் சிவாஜிக்கும் சொத்தில் ஏதாவது விரோதமா? அல்லது நான் எப்போதாவது சிவாஜியினுடைய குணம் கெட்டதுன்னு சொன்னேனா? இப்பவும் நான் சொல்வது நாடு நாசமாகப் படாதே என்ற நல்ல எண்ணத்தோடேதான்.

சிட்னீஸ் : சாஸ்திர விரோதம். இந்தப் பட்டாபிஷேகம்! சிவாஜி சூத்திரர் என்று ஆட்சேபனை செய்கிறீராம்.

கேசவ : நானா செய்கிறேன். அதென்னப்பா, அப்படிச் சொல்றே? நான் சாஸ்திரத்தைத்தான் சொல்கிறேன். வேறொன்றுமில்லை.

சிட்னீஸ் : சாஸ்திரம் இருக்கட்டும். கேசவப்பட்டரே! இந்தக் காரியத்தில் உம்ம ஒத்தாசை கிடைத்தால், நீர் என்ன கேட்டாலும் சரி. லட்ச வராகன் சன்மானம் வேண்டுமா? சரி! ஜாகீர் வேண்டுமா? சரி! அரண்மனைப் புரோகிதம் வேண்டுமா? சரி! எது வேணுமானாலும் தருகிறேன்.

கேசவ : ஆசை காட்டி என்னை அதர்மத்திலே தள்ள முடியாது சிட்னீஸ். எங்களுக்குத் தெரிந்த ஞானப்படி, சாஸ்திரப்படி இந்தப் பட்டாபிஷேகம் நிச்சயமாய்ப் பாப காரியம்ணு தெரியுது. ஆனா எங்களைவிட சிரேஷ்டமானவர், சாஸ்திரத்தை மேலும் ஆராய்ந்து பார்த்தவர் சம்மதம் கொடுத்தா எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.