பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

அறிஞர் அண்ணா


பாலச்சந்திரப்பட்டர், சோமனாதப்பட்டர், யாரை வேண்டுமானாலும் அழைத்துச் செல்லும், தடை கூறவே கூடாது. தடை கூறினால் சிவாஜியிடம் உமக்குத் துவேஷம் இருக்கிறது கெட்ட எண்ணம் இருக்கிறது என்றுதான் பொருள். குழந்தைகூடச் சொல்லுமே, இதை.

கேசவ : சரி! போய் வருகிறேன்; ஆட்சேபனை என்ன?

சிட்னீஸ் : மற்ற இருவரையும் கலந்துகொண்டு தயாராய் இருங்கள் புறப்பட நான் பல்லக்குப் பரிவாரங்கள் தயார் செய்துவிட்டு, பிறகு வந்து பார்க்கிறேன். (போகிறான்)

காட்சி 12

இடம் : தர்பார்

உறுப்பினர்கள் : சிவாஜி, தளபதிகள்.

சிவாஜி : மராட்டிய மாவீரர்களே! இந்த மண்டலத்தைக் காக்கும் தளபதிகளே! நீங்கள் சிந்திய ரத்தம் வீண் போகவில்லை. வீரம் விழலுக்கிறைத்த நீராகவில்லை. நமது மனக்கண்முன் தோன்றித் தோன்றி நம்மை ஆவேசமுறச்செய்து மகாராஷ்டிரம் உதயமாகிவிட்டது. சாம்ராஜ்யம் உருவாகிறது. வீரர்காள்! உங்கள் சிருஷ்டி அந்த ராஜ்யம்! மங்கிக் கிடந்த மண்டலம் சிங்கங்களாகிய உங்களால் மணிக்கொடியை இனி பறக்கவிடும். மலைக்கு மலை தாவிய நாம், கோட்டைக்குக் கோட்டை குத்துவெட்டு நடத்திவந்த நாம், பரத கண்டத்திலே ஒரு பரந்த ராஜ்யத்தை ஸ்தாபித்து விட்டோம். சாத்பூரா மலைச் சாரல் சச்சரவுக்கு உறைவிடம் என்பது மாறி, சௌந்தர்யமான ஒரு சாம்ராஜ்யமாகிவிட்டது.

(வீரர்கள்)

மராட்டிய மண்டலாதிபதிக்கு ஜே!

மாவீரர் சிவாஜி மகாராஜாவுக்கு ஜே!