பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

57


சாத்பூரா சாம்ராஜ்யாதிபதிக்கு ஜே!

ஆருயிர் தோழர்களே! என் ஜெயம் உங்கள் உடைவாளின் விளைவு. என் கீர்த்தி உங்கள் தேகத்திலே உண்டான புண்களிலே பூத்தது. உங்கள் ரத்தமே, மகாராஷ்டிர பூமியைப் புனித பூமியாக்கிறது. நீங்கள் வாழ அன்னை அருள் புரிவாள். பவானியின் பரிபூரண கடாக்ஷம் உமக்குக் கிடைக்கட்டும்.

1. தள : மகராஜ்!

சிவாஜி : அன்பால் அர்சிக்கிறீர்கள், அந்த வார்த்தையை ஆனால் அந்தப் பட்டத்தை நான் இன்னும் பெறவில்லை. பட்டாபிஷேக காரியத்துக்குத் தங்கள் அனுமதியைத் தான் எதிர்ப்பார்க்கிறோம்.

2. தள : நம் நாட்டுப் பொற்கொல்லர் சித்திரவேலைப் பாடுள்ள சொர்ண சிங்காதனம் தயாரித்துவிட்டார்.

3. தள : அரண்மனைக்கு அலங்கார வேலைகள் இரவு பகலாக நடந்தேறி வருகிறது.

4. தள : ஆரணங்குகள் வாழ்த்துக் கீதங்களைப் பாடியப்படி உள்ளனர் மகராஜ்.

1. தள : கவிவாணர்கள் புதுப்புது கவிதைகளை இயற்றியப்படி உள்ளனர் காவலா.

2. தள : சத்திரபதி சிவாஜிக்குப் பொன்னாடையும் நெய்தாகிவிட்டது.

3. தள : பொற்குடங்களிலே புனித நீர் நிரப்பி யானை மீது கொண்டு வர ஏற்பாடாகி இருக்கிறது.

4. தள : நகரெங்கும் விழாக் கொண்டாட மக்கள் துடிக்கிறார்கள்.

1. தள : புகழ்மிக்க நமது படைகள் பூரிப்புடன் பவனிவர தயாராகியுள்ளது.