பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

அறிஞர் அண்ணா


2. தள : பட்டாபிஷேகம் நடைபெறுவது டில்லி பாதுஷாவுக்கும் தெரியும்.

3. தள : பரதகண்டம் முழுவதுமே பெருமையடைகிறது. பாழடைந்த மாளிகை புதுப்பிக்கப்பட்டது கேட்டு, அணைந்துபோக இருந்த சுதந்திர விளக்கு சுடர்விட்டெரிய தியாக நெய் ஊற்றி இருப்பது கேட்டு! மராட்டிய மண்டலாதிபதிக்கு ஜே!

சிவாஜி : உண்மைத் தோழர்களே! ஊராரின் உள்ளத்தை நான் அறிவேன். உங்கள் உவகையும் தெரிந்ததே. உங்கள் ஆதரவை அரணாகக் கொண்டுதானே அரசபீடம் ஏறத் துணிந்திருக்கிறேன். போரிலே நான் உங்களில் பலரைக் கடிந்து உரைத்திருப்பேன். மனதில் குறையிருப்பின் பொறுத்திடுக.

4. தள : மன்னா! இது என்ன பேச்சு? உமது ஏவலர் நாங்கள். உமது மொழியே எமது வாழ்க்கைக்கு வழி.

சிவாஜி : இந்த சாம்ராஜ்யத்தைக் காண மராட்டியர் காட்டி இருக்கும் வீரம், தியாகம், சேவை. அபாரம். சரித்திரத்திலே பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டியவை. உங்கள் சேவைக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்?

1. தள : மராட்டிய மன்னர் மன்னனாகி, முடிதரித்து, எம் கண்முன் நின்று, எங்கள் மனதை குளிரச் செய்யுங்கள் மகராஜ். அதுவே கைம்மாறு, வாழ்க்கையில் நாங்கள் எதிர் பார்க்கும் பேறு.

(தளபதிகள் போகிறார்கள். சிட்னீஸ் சோர்ந்த முகத்துடன் வருகிறான்.)

சிவாஜி : சிட்னீஸ் ! என்ன முகவாட்டம்?

சிட்னீஸ் : ஒன்றுமில்லை. வேலைத் தொந்தரவுதான்.

சிவாஜி : இல்லை, இல்லை! விசாரம் இருக்கிறது உனக்கு.