பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

61


காட்சி - 13

இடம் : வீதி

உறுப்பினர்கள் : பட்டர்கள், சிட்னீஸ்

(பட்டர்களைத் தூது அனுப்புவது)

சிட்னீஸ் : பிராமணோத்தமர்களே! நீங்கள் மேற்கொண்டுள்ள காரியம் மிகமிக முக்கியமானது; மகத்தானது; புனிதமானது; மராட்டிய மண்டல ஏட்டிலே தனி இடம் பெறும் சிலாக்கியமான காரியம்.

பாலச்சந் : பூர்ண சந்திரனைப் பார்த்து ரசிக்கும்படி விளக்கு கொண்டு வந்து தருவது போல் இருக்கிறது தங்கள் பேச்சு. சிவாஜி மகாராஜனாக முடிதரித்துக் கொள்ள வேண்டுமென்பதில் எங்களுக்கு அக்கரை இல்லையா என்ன?

கேசவ : நாங்கள் மராட்டிய மண்ணிலே பிறக்கவில்லையா? எங்களுக்கு அந்த எண்ணம் ஏற்படாமல் இருக்குமா?

பாலச்சந் : சிவாஜியின் உப்பைத் தின்று வாழும் நாங்கள் இந்த உதவிகூடச் செய்யாமல் இருப்போமா?

சிட்னீஸ் : பூரிப்படைகிறேன் பூசுரரே! உங்கள் மொழி கேட்டு மகிழ்கிறேன். மராட்டியத்துக்குப் புது வாழ்வு அளிக்கும் பொறுப்பு உங்களிடம் இருக்கிறது.

கேசவப் : பொறுப்பை மறந்துவிடக் கூடியவர்களா நாங்கள்?

சிட்னீஸ் : பொற்காலம் தோன்றப்போகிறது. உங்கள் பேருதவியால்.

பாலச்சந்: தோன்றாமல் என்ன?

சிட்னீஸ் : பிராமணோத்தமர்களே! மாவீரர் தலைவன் மணி முடி தரித்துக் கொள்வது கூடாது. ஏனெனில் அவர் சூத்திரர் என்று இங்கு சில சூது மதியினர் பேசினரே!