பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

67


காகப் : ஆமாம்.... அதனால் என்ன? அதற்குத்தான் ராஜயோகம் என்று பெயர்.

ரங்கு : பெயர் எதுவானாலும் இருக்கட்டும். ஸ்வாமி. அவ்விதமான ஆனந்தம் கிஞ்சித்தேனும் என் போன்றவாளுக்குத் தேவையில்லை. நான் சாமத்துக்கும் யஜுருக்கும் வித்யாசம் தெரியாத மண்டு. ஆனால் நாலு வேதத்தையும் நாற்பத்தெட்டுவித பாஷ்யத்தோடு உபதேசிக்கக்கூடிய தங்களைப் போன்ற தன்யாளுக்கு இந்த ராஜபோகத்திலே ஆயிரத்திலே ஒரு பங்கு இருக்கப்படாதோ? இல்லையே என்பதுதான் நேக்குள்ள விசாரம்.

காகப் : டே, ரங்கு. உன் குரு பக்தி இருக்கே. அது கேட்க நேக்கு ப்ரம்மானந்தமா இருக்கு. இருக்கட்டும்; ராஜபோகம் இருக்கே, அது என்ன பிரமாதம்.

ரங்கு : என்ன ஸ்வாமி இது. சாமான்யாளுக்குச் சொல்றதையே நேக்கும் சொல்றேளே! நானுங்கூடத்தான் தங்கள் உபதேசத்தின்படி லோகம் மாயை, ஆனந்தம் என்பது அநித்யம், போக போகாதிகள் வீண் சொப்பனம், இந்திரியச் சேட்டைகள் ஆகாது என்றெல்லாம் பாமராளுக்குக் கூறுகிறேன். அதே விஷயத்தை நேக்கும் சொல்றேளே! மாயா வாதம் மனத் திருப்தி தருமா?

காகப் : நான் மாயைப் பற்றிச் சொல்லவில்லை. ராஜபோகம் நிலையானதுதான்; சந்தோஷமானதுதான். ஆனா ப்ரமாதமில்லே. ஏன் அப்படிச் சொல்றேன் என்கிறியோ? அந்த ராஜபோகத்துக்கு லவலேசமும் குறைந்தல்ல நமக்கு இருப்பது....

ரங்கு : இந்தப் பர்ணசாலையை அரண்மனையாகவும், இந்தச் சீடர்களைச் சேடிகளாகவும் நினைத்துக் கொள்ள வேண்டுமென்கிறீராக்கும்.

காகப் : இல்லை. ஒரு ராஜாவுக்கு ஒரு ராஜ்யம். நமக்கோ எல்லா ராஜ்யங்களும் சொந்தம். அரசனுக்கு ஒரு அரண்மனை.