பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

69


காகப் : ஏன் செய்யவில்லை? அரசு போகத்துக்கும், ஆரிய யோகத்துக்கும் உள்ள தாரதம்யத்தைத்தானே புலித் தோல் உபதேசம் செய்கிறது.

ரங்கு : என்ன ஸ்வாமி இது ! வேடிக்கை பேசுகிறீர்.

காகப் : ரங்கு வேடிக்கை இல்லை. புலித்தோலைப் பார். இது நமக்கு ஆசனம். சொர்ண சிங்காதனத்தின் மீதிருந்து செங்கோல் செலுத்துகிற மகாராஜனும் கூட இந்தப் புலித்தோல் ஆசனத்தில் அமரும் நமக்கு மரியாதை காட்டுவன். இது கேவலம், மிருகத்தின் தோல். ஆனால் மன்னாதி மன்னரும் இதன் முன் மண்டியிடுகிறார்கள். இல்லையா?

ரங்கு : ஆமாம் குருவே!

காகப் : இப்போது யோசித்துப்பார். தங்க சிம்மாசனத்தில் அமர்ந்தாலும் நமது திருப்பாதத்தை வணங்கும் ராஜனுடைய யோகம் பெரிதா? தோலின் மீதமர்ந்து அரசர்களுடைய முடியைக் காலிலே காணும் நம்முடைய யோகம் பெரிதா?

ரங்கு : உண்மைதான் குருவே!

காகப் : அதுமட்டுமல்ல : அரசர்களை அஞ்சலி செய்யச் சொல்லும் இந்த அற்புதமான ஆசனம் இருக்கிறதே, இது ஒரு காலத்தில் ஆரண்யத்திலே உலவிக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் நாம் அதன் அருகே கூட செல்ல முடியாது. முடியுமோ?

ரங்கு : எலியைக் கண்டாலே சில சமயம் மிரள்கிறோமே! புலியிடம் பயமில்லாமல் இருக்குமா ஸ்வாமி?

காகப் : அப்படிப்பட்ட புலியின் தோல் மீது நாம் உட்கார்ந்திருக்கிறோம். பூபதிகள் நமக்குப் பூஜை செய்கிறார்கள். முட்டாளே! இது உண்மையான யோகமா? ராஜபோகம் உண்மையா?

ரங்கு : விஷயம் பிரமாதமாய் இருக்கிறதே ஸ்வாமி!