பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

அறிஞர் அண்ணா


காகப் : இன்னமும் கேள்! இவ்வளவு திவ்யமான ஆசனத்தை நாம் அனாயாசமாகப் பெற்றோம். இல்லையா? காட்டிலே புலி உலாவிற்று. அதை வேட்டையாடியது நாமல்ல. புலியின் பற்களால் கடியுண்டவர்கள். நகங்களால் கீறு பட்டவர்கள். ஏன், புலிக்கே இரையானவர்கள் வேறு வேறு. கடைசியில் புலியை எவனோ கொன்றான். எவ்வளவோ கஷ்டத்துக்குப் பிறகு. யாரவன்? தெரியாது. புலியைக் கொன்ற வீரனை மக்கள் மறந்துவிடுவர். ஆனால் அந்தப் புலித்தோல் நமக்குத் தானமாகத் தரப்பட்டதும் அதன் மீது அமரும் நமக்கு மக்களும் மன்னரும் மரியாதை செய்கின்றனர். பார்த்தாயா, நமக்கிருக்கும் யோகம் எப்படிப்பட்டது என்பதை. ராஜபோகம் ரமணீயமானது தான். ஆனால் அது படமெடுத்தாடும் நாகம் போன்றது! எந்தச் சமயத்தில் விஷப்பல் பதியுமோ என்ற பயத்தோடு தான் எந்த அரசனும் இருக்க வேண்டும். நமக்கு இருக்கும் யோகம் அப்படியல்ல. துன்பமில்லாத இன்பம். மாசு இல்லாத மாணிக்கம். முள்ளில்லாத ரோஜா இந்த மகத்தான வித்தியாசத்தைத் தெரிந்துக் கொள். ராஜாவாக இருப்பதைவிட ரிஷியாக இருப்பதே மேல். அரச வாழ்வை விட ஆஸ்ரம வாழ்வு அனந்த கோடி தடவை மேல். அசடே! ஆரியனாகப் பிறந்தும் அரச போகத்திலே ஆசை வைக்கிறாயே. ஆரியம் விதைக்காது விளையும் கழனி. வெட்டாது ஊற்றெடுக்கும் தடாகம்...

ரங்கு : குருவே! உணர்ந்து கொண்டேன். உண்மையிலேயே நான் ராஜ போகம் சிலாக்கியமானது என்று தான் எண்ணிக் கொண்டிருந்தேன். தாங்கள் செய்த உபதேசத்தால் தெளிவு பெற்றேன். அரச போகம், ஆரிய யோகத்துக்கு ஈடாகாது.

காகப் : உணர்ந்து கொண்டாயா? ஆரிய யோகம் எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொண்டாயல்லவா?

ரங்கு : ஆகா! நன்றாகத் தெரிந்து கொண்டேன். ஆரிய யோகம் சாமான்யமானதல்ல. தாங்கள் கூறியபடி, அது முள்ளில்லாத ரோஜாதான்.