பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

71


காகப் : ரோஜா மட்டுமல்ல. அது வாடாத மல்லி.

ரங்கு : பொருத்தமான உபமானம். அது வாடாத மல்லிகை தான்.

காகப் : அதுவும் நாம் தேடாதது.

ரங்கு : ஆமாம்! அதைப் பெற நாம் அலைந்து தேடி அலுப்பதில்லைதான்.

காகப் : அப்படிப்பட்ட ஆரிய வாழ்வை அற்பமென்று கருதினாயே!

ரங்கு : நான் அசடன் குருவே. அண்ட சராச்சரங்களிலும் ஆரிய யோகத்துக்கு ஈடேதும் கிடையாது என்பதை இப்போது அறிந்து கொண்டேன்.

காகப் : தன்யனானாய் ரங்கு! தலைமுறை தலைமுறையாக நமக்குக் கிடைத்துள்ள இந்த வாழ்வு சாமான்யமானதல்ல; சகலருக்கும் சித்திக்கக் கூடியதுமல்ல...

ரங்கு : குருதேவா! அதிக உபதேசம் ஏன்... ஆரியம் சாமான்யமானதல்ல. அது விலையில்லா மாணிக்கம்; முதலில்லா வியாபாரம்.

காகப் : டேய், ரங்கு! அசடே!! முதலில்லா வியாபாரம் என்று சொல்லாதே. அர்த்தம் அவ்வளவு நன்னா இராது.

ரங்கு : வெளியே சொல்வேனா குரு. நமக்குள் கூறிக் கொண்டதுதானே.

காட்சி - 15

இடம் : பாலாஜி வீடு

உறுப்பினர்கள் : பாலாஜி, பகதூர்.

பாலாஜி : பகதூர்! பாடங்களை விரைவாய் கற்றுக் கொள்ளணும், தெரிந்ததா? இப்படி நெட்டை மரம் போல் நின்று கொண்டிருந்தாயோ, இந்துமதியை அவன் தட்டிக்கிட்டுப் போய்விடுவான்.