பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

அறிஞர் அண்ணா


ரங்கு : ஸ்வாமி! கூப்பிட்டேளா?

காகப் : ஆமாண்டா! முன்பு உனக்கு ஒரு பைத்தியக்காரச் சந்தேகம் மனதை குடைஞ்சிண்டிருந்துதே...

ரங்கு : அதுவா ஸ்வாமி? தங்களுடைய வியாக்யானத்தைக் கேட்ட பிறகு சந்தேகம் பஞ்சு பஞ்சாய்ப் பறந்தே போச்சு.

காகப் : போய்விட்டதல்லவா? அப்படிப்பட்ட மேன்மையான, மகிமையான வாழ்வு நம்முடையது என்பதைத் தெரிந்து கொள்ளாதவா நம்ம குலத்திலே அத்தி பூத்தது போலத் தான். உன் போல மண்டுகள் அதிகம் கிடையாதுடா.

ரங்கு : ஸ்வாமி! அடிக்கடி மண்டூ, மண்டூண்ணு என்னைச்சொல்லி...

காகப் : கேலி செய்கிறேனேன்னு கோபமா? பைத்தியக்காரா! உன்மேலே உள்ள அபாரமான ஆசையினாலே அது போலச் சொல்றேண்டா. வேறொண்ணுமில்லே. அது சரி! நம்ம சாஸ்திராதிகளைப் படிக்கிறியே, அது புரியறதோ நோக்கு.

ரங்கு : என்ன ஸ்வாமி இது? சாட்சாத் காகப் பட்டருடைய பிரதம சீடனாக இருக்கேன். என்னைப் போய் சாஸ்திரம் புரியறதான்னு கேட்கறதுன்னா.

காகப் : மத்தவர் கேட்டா சொல்லுடா இதை இப்ப கேட்கறது நானல்லவோ. சாஸ்திராதிகள் புரியறதோ?

ரங்கு : ஆஹா! நன்னா புரியறது. மத்தவாளுக்குப் புரியவைக்கவும் முடியறது.

காகப் : சம்சயங்கள் ஏற்பட்டால் விளக்க முடியுமோ?

ரங்கு : ஏதோ எனக்குத் தெரிந்த அளவிலே...

காகப் : சரி! பதி பக்தியின்னா அதற்கு என்னடா பொருள்?

ரங்கு : தன்னுடைய பதியிடம் பக்திப் பூர்வமாக நடந்து கொள்வது என்று பொருள்.