பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

75


காகப் : அதுதானே?

ரங்கு : ஆமாம் ஸ்வாமி! அதுதான்! ஏதேனும் விசேஷமான பொருள் உண்டோ ஒரு சமயம்!

காகப் : பதிபக்தி! தன்னுடைய புருஷனிடம் மாறாத குறையாத பக்தியுடன் நடந்து கொள்வதுதான். இதோ பார்! துரோபதைக்குப் பதிகள் ஐவர். பதிபக்தி தத்துவத்தின்படி துரோபதை ஐவருக்கும் கட்டுப்பட்டு பய பக்தியுடன் விஸ்வாசத்தோடு நடந்து கொள்ள வேண்டும். அல்லவா!

ரங்கு : ஆமாம்!

காகப் : இப்படி ஒரு சம்பவம் நேரிட்டிருந்தா என்ன ஆகியிருக்கும்னு யோசித்துப்பார்... தர்மன் தன்னோடு தேவாலயம் வரும்படி அழைக்கிறான்; அர்ச்சுனனோ 'ஆரணங்கே! ஆடிப்பாடி மகிழலாம் வா நந்தவனத்துக்கு' என்று அழைக்கிறான்; பீமனோ அருமையான காய்கறிகளைக் கொண்டு வந்து எதிரே கொட்டி விட்டு, 'பதிசொல் கடவாத பாவாய் உடனே சமைத்துப்போடு. அகோரமான பசி எனக்கு' என்று வற்புறுத்துகிறான். நகுலன் நாட்டியம் பார்க்கக் கூப்பிடுகிறான். சகாதேவன் சொக்கட்டான் ஆடக் கூப்பிடுகிறான் என்று வைத்துக் கொள். துரோபதை பதிபக்தியைக் காப்பாற்றியாக வேண்டும். பதிகளோ ஐவர், என்னடா செய்வா?

ரங்கு : சிக்கலாக இருக்கே ஸ்வாமி!

காகப் : என்னடா செய்யலாம். ஒரு புருஷனை மணந்து கொண்ட நிலையிலே உத்தமிகள் மெத்தக் கஷ்டப்படுவதைப் பார்க்கிறோம். துரோபதைக்கோ...

ரங்கு : ஐவர் கணவர். அவர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரியம் செய்யச் சொல்லி தேவியை அழைக்கிறா.