பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

அறிஞர் அண்ணா


காகப் : இதிலே துரோபதை பாரபட்சம் காட்டக் கூடாது.

ரங்கு : ஆமாம்! பதி பக்தி கெட்டு விடும்.

காகப் : தன் பர்த்தாவிலே யாருடைய பேச்சையும் தட்டி நடக்கக்கூடாது.

ரங்கு : ஆமாம்! கஷ்டமாய் இருக்கே ஸ்வாமி?

காகப் : என்னடா இது! இவ்வளவு காலத்திற்குப் பிறகு, இந்தச் சம்பவத்தைக் காதாலே நீ கேட்கற போதே கலக்கமடையறே. அந்தப் புண்ணியவதி இப்படிப்பட்ட சிக்கல்களை எவ்வளவோ வாழ்க்கையில் கண்டிருப்பா? எல்லாவற்றையும் சமாளித்தாக வேண்டும்.

ரங்கு : ஆமாம்! எப்படி முடிந்தது?

காகப் : நீயே யோசித்துச் சொல்! புத்திதீட்சண்யம் இருக்க வேணுமடா. ரங்கு! சதுப்பு நிலத்திலே நடந்து செல்பவனுக்குக் காலிலே திடம் இல்லாவிட்டால் என்ன ஆகும். அதுபோலத்தான். நமது சாஸ்திர புராணாதிகளிலே உள்ள சம்சயங்களைப் போக்க நமக்குத் தெரியாவிட்டால் நமது பாடும்...

ரங்கு : ஆமாம் ஸ்வாமி! திண்டாட்டமாத்தான் இருக்கும்.

காகப் : எவனாவது ஒரு விதண்டாவாதி, நான் கேட்ட இதே கேள்வியை உன்னைக் கேட்கிறான் என்று வைத்துக்கொள்.

ரங்கு : கேட்பா ஸ்வாமி! கேட்பா. இப்பவே பலபேர் கேட்டுண்டுதான் இருக்கா.

காகப் : நீ என்ன பதில் சொல்வே?

ரங்கு : நானா?

காகப் : ஆமாம்? பதில் சொல்லாது ஊமையாகி விடுவாயோ? உன்னை யார் பிறகு மதிப்பா?