பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

அறிஞர் அண்ணா


சொர்ண மாளிகை என்ற பெயர் பொருத்தமாக இராதோ?

1. தளபதி : நமது சிவாஜி மகாராஜாவுக்கு ஜெயச் சின்னமாக அந்த மாளிகை இருக்கப் போகிறது. அதனால் ஜெயவிலாசம் என்ற பெயர் பொருத்தமாக இருக்கும். நாம் கூறிக் கொண்டே போவானேன்? அவருடைய உத்தரவு எப்படியோ?

சிவாஜி : நான் அதைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்கவில்லை, மகுடாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பே தாங்களெல்லாம் மகாராஜா என்று அழைக்கிறீர்களே, எவ்வளவு ஆழ்ந்த அன்பு உங்களுக்கு என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

(மோகன், வீரர்கள் ஒடிவருகின்றனர்)

ஏன், என்ன செய்தி? எதிரிப் படைகளா?

மோகன் : எதிரிகளிடம் படையில்லை, மகராஜ்... தடை விதித்திருக்கிறார்கள்...

சிவாஜி : தடையா? என்ன? யார்?

வீரன் : மகராஜ்! பட்டாபிஷேகம் நடக்கக்கூடாதாம்.

சிவாஜி : சொன்னவன் யார்?

மோகன் : பிணமாகாமல்தான் இருக்கிறார்கள். அந்தப் பித்தர்கள்.

சிவாஜி : அமைதியாகப் பேசுங்கள். பட்டாபிஷேகத்தைப் பாதுஷாவின் ஆட்கள் தடுக்கின்றனரா?

மோகன் : அவர்கள் துணியவில்லை மகராஜ்! அவர்களுக்கில்லை அந்தக் கெடுமதி. மொகலாயர் வீரத் தலைவனை மதிக்கின்றனர். ஆனால்...

சிவாஜி : ஆனால்! என்ன அது ஆனால்?

வீரன் : முகூர்த்தம் குறிக்கும்படி புரோகிதரைக் கேட்டோம்.