பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

85


சிவாஜி : நாள் சரியில்லை. நட்சத்திரம் சரியில்லை என்று கூறியிருப்பார்.

வீரன் : இல்லை மகராஜ்! விபரீதமாகப் பேசுகிறார்கள்.

சிவாஜி : விபரீதமாகப் பேசுகிறார்களா? என்ன உளறுகிறீர்கள்?

மோகன் : அப்படிக் கேட்டிருக்க வேண்டும். அந்த உலுத்தர்களை! வாயை மூடிக் கொண்டு வந்து விட்டீர்கள் வகையற்று!...

சிவாஜி : சந்தர்.

மோகன் : மகராஜ் மன்னிக்க வேண்டும்.

வீரன் : புரோகிதர் பட்டாபிஷேகம் கூடாதென்று...

4. தளபதி : கூடாதென்று...?

வீரன் : கூறிவிட்டனர்.

4. தளபதி : ஏன்? என்ன காரணம்?

வீரன் : நமது தலைவர் சூத்திரராம். சூத்திரருக்கு ராஜ்யாபிஷேக உரிமை கிடையாதாம். அது சாஸ்திர விரோதமாம்.

(சிவாஜி 'ஆஹா' என்று வாளை உருவ, மற்றவர்களும் வாளை உருவுகின்றனர். பாலச்சந்திரப் பட்டர், கேசவப்பட்டர் வருகின்றனர்.)

கேசவப் : எங்களைக் கொல்ல இத்தனை ஆட்களும் வாட்களும் தேவையா? வீரர்களே! உங்களுடைய கோபப் பார்வையாலேயே எங்களைச் சுட்டுச் சாம்பலாக்கி விடலாமே. பொறுங்கள்! பொறுங்கள்!! பொறுத்தார் பூமியாள்வார்...

பாலச் : பொங்கினவர் காடாள்வார்.

சிவாஜி : சரி! இவர்களை அழைத்துக் கொண்டு நந்தவனம் சென்று என்ன சேதி என்று விசாரித்துத் தகவலை பிறகு வந்து கூறுங்கள் என்னிடம். என் முன்நிறுத்த வேண்டாம். இவர்களைக் கொண்டு போங்கள்.