பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

அறிஞர் அண்ணா


(தளபதி பட்டர்களை அழைத்துப் போக, மோகனும் போகிறான்.)

சிவாஜி : சந்தர்! வா இங்கே! நீ போகாதே! இங்கேயே இரு!

(சிறிது மௌனமாய் இருந்துவிட்டு)

நான் எப்போதும் இப்படித் திகைத்ததில்லை. எதிரியின் படைகள் நான்கு பக்கமும் சூழ்ந்து கொண்டபோதும் எனக்கு ஏற்பட்டதில்லை இந்தக் கலக்கம். நான் நாடாளத் தகுதியற்றவன்! சிவாஜி சூத்திரன்! சூத்திரன் நாடாளக் கூடாது? இது சாஸ்திரம்.

மோகன் : சாஸ்திரமல்ல மகராஜ்! நமது இருதயத்திலே வீசப்படும் அஸ்திரம்.

சிவாஜி : உண்மைதான். எதிரியின் வாளுக்கும், வேலுக்கும் என் மார்பு அஞ்சியதில்லை. இந்த அஸ்திரம்?...

மோகன் : மகராஜ் என்னால் தாங்க முடியவில்லை! பொறுக்க முடியாது. ஒரு வார்த்தை சொல்லுங்கள்; தங்களைத் தடை செய்யத் துணிந்தவர்களை....

சிவாஜி : கண்ட துண்டமாக்குவாய். பயன் என்ன? வாள் கொண்டு அவர்களைச் சிதைக்க விரும்புவாய். அவர்கள் வாள் எடுக்காமலே என்னைச் சித்திரவதை செய்துவிட்டார்களே. முகலாயச் சக்கரவர்த்தி முயன்று பார்த்து தோல்வி பெற்றான். சண்டமாருதம் போன்ற எதிரிப் படையினால் என் சித்தத்தைக் குறைக்க முடியவில்லை. சாத்பூரா முழுவதும் ரத்தக் காடான போது என் மனம் குலையவில்லை. உற்றார் உறவினரும், ஆருயிர்த் தோழர்களும், களத்திலே பிணமானபோதும் என் உறுதி குலையவில்லை. போர்! போர்!! போர்!!! என்றே கர்ஜித்தேன். இதோ, என்னை நாடாளத் தகுதியற்றவன் என்று கூறிவிட்டார்கள். நான் சூத்திரன். சூத்திரனுக்கு சாஸ்திரம் அனுமதி தரவில்லையாம். ராஜ்யம் ஆள!