பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

87


மோகன் : சூதான வார்த்தை அது.

சிவாஜி : ராஜ்யம்! யார் சிருஷ்டித்த ராஜ்யம்? எவ்வளவு கஷ்டங்களுக்குப் பிறகு சிருஷ்டித்த ராஜ்யம்? சந்தர்! எத்தனைத் தாய்மார்கள், தங்கள் குமாரர்களை இதற்கு அர்ப்பணம் செய்தனர். எத்தனை காதலிகள் தங்கள் காதலர்களை இதற்குக் காணிக்கை செலுத்தினர். ராஜ்யம் ஆள சிவாஜிக்கு உரிமையில்லையாம். சூத்திரன் ராஜ்யம் அமைக்கலாம். ரணகளத்திலே உழைக்கலாம். ஆனால் அவன் ஆளக் கூடாது. இது சாஸ்திரம் சந்தர் இந்த சாஸ்திரம்?....

மோகன் : சாம்பலாகட்டும் மகராஜ்! சுட்டுச் சாம்பலாக்குவோம். புறப்படுங்கள்.

சிவாஜி : சந்தர் என் மனம் குழம்பிவிட்டது.

மோகன் : மகராஜ்! மகராஜ்!

சிவாஜி : மோகன் விலகிநில்! விசாரம் நிறைந்த என்னை விட்டு விலகு. அப்பா சந்தர்! அஞ்சாநெஞ்சன்,அசகாய சூரன், ஆற்றல்மிக்கோன் என்றெல்லாம் மராட்டிய மண்டலம் புகழ்ந்ததே! அந்த மாவீரனுடைய நிலையைப் பார். மகாராஷ்டிரம் மயக்கத்திலே சிக்கி விட்டது. உன்னையும் அந்த நோய் பிடிக்கா முன்பு விலகிச் செல்.

மோகன் : மகராஜ் வீணான மனக்கலக்கம் கூடாது! உமது ஆத்திரத்தை மீறும் ஆற்றல் கொண்ட ஆண்மகன் எவனும் இங்கே இருக்க முடியாது. என் கையில் வாள் இருக்கும் வரை. தங்கள் தாள் பணிகிறேன். ஒரு வார்த்தை சொல்லுங்கள்.

சிவாஜி : நாளைக்கு வா! இன்று என்னை இம்சிக்காதே! வேதனை வெள்ளம் போலாகிவிட்டது. நான் அதைத் தாண்டி கரை ஏறுவேனோ அல்லது அதிலேயே அமிழ்ந்து போவேனோ யார் கண்டார்கள்? மகாராஷ்டிர மண்டலமே! உன் கதி என்னவோ...