பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

89


அப்படிச் சொல். பிறகு பாரேன்! அந்த முரட்டு மோகன் அலறி அடித்துக் கொண்டு என்னிடம் வருவான். வாளைத் தொடுவதில்லை என்று சத்தியம் செய்து தருவான். நான் கொஞ்ச நேரம் பிகு செய்துவது போல் செய்துவிட்டு, பிறகு சம்மதிப்பேன், பயல் பெட்டிப் பாம்பாகி விடுவான். இந்தத் தந்திரத்தால் தான் மோகனை நம் வழிக்குக் கொண்டு வர முடியும்?

இந்து : தந்திரம் கூட எனக்குக் கசப்பாகத்தான் இருக்கிறது. நான் ஒப்புக்குக் கூட எப்படி பகதூரைக் கல்யாணம் செய்துக் கொள்வதாக கூறுவேன்?

சாந் : கூறித்தான் ஆக வேண்டும். உனக்குத் தெரியாது. இந்தக் காதல் இருக்கிறதே அது ஒரு மாதிரியான வெறி. வேறு ஒருவன் அந்தக் காதலை தட்டிப் பறித்துக் கொள்வான் என்று தெரிந்தால் போதும். காதலால் தாக்குண்டவன் காலடியில் விழுந்தாவது காரியத்தைச் சாதித்துக் கொள்ள முயல்வான். இது, பாலாஜி சொன்னது.

இந்து : பாலாஜி சொன்னது! பாழாய்ப்போன பாலாஜி நல்ல யோசனை சொன்னான் உமக்கு. சரி கொஞ்ச நேரம் நெருப்பிலே நிற்கிறேன். வேறு வழியில்லை.

சாந் : அப்படிச் சொல்.நீ எப்போதும் நல்ல பெண். அதோ யாரோ வருகிறார்கள். நீ போ! உடைகளை அணிந்து கொண்டுவா!

(பாலாஜியும் பகதூரும் வருகின்றனர்)

பாலாஜி : நமஸ்காரம் சாந்தாஜி! நமஸ்காரம்.

சாந் : நமஸ்காரம்.

பாலா : இவர்தான் நான் சொன்ன பகதூர்.

(பகதூரை அங்குள்ள ஆசனத்தில் அமரச் செய்துவிட்டு)

நான் தங்கள் பூஜை அறையைப் பார்க்க வேண்டும் சாந்தாஜி.

சாந் : ஆஹா! அதற்கென்ன? வா, உள்ளே காட்டுகிறேன்.