பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

அறிஞர் அண்ணா


பக : சுந்தரி! சுகுந்தா! சுகுணவதி! சுப்ரதீபா! உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள மன்னாதி மன்னர்கள் மண்டியிடுவார்களே. அப்படியிருக்க தைரியம் என்ன தேவைப்படுகிறது?

இந்து : மறந்துவிட்டீரோ? பாதி ராத்திரியிலே.

பக : ஐயோ! பாதி ராத்திரியிலே என்ன?

இந்து : என்னவா? பாதி ராத்திரியிலே, நான் பாதி உடல் புலியாக மாறுவேன்.

பக : ஐயையோ!

இந்து : அது தெரிந்துதான் என்னை யாரும் கல்யாணம் செய்து கொள்ள முன்வரவில்லை. நானும் உம்மைக் காதலிக்கிறேன்..

(பகதூர் பயந்து, 'புலி, புலி' என்று ஓட, மோகன் வர, சாந்தாஜி, பாலாஜி வருதல்)

இந்து : விருந்து முடிகிற நேரத்திலே வந்தீரே.

மோகன் : இந்து! பகதூர் பாக்யசாலி! மராட்டிய மண்டலத்திலேயே இப்போது இப்படித்தான். யார் யாருக்கோ எதிர்பாராத யோகம் அடிக்கிறது. மந்தியிடம் மலர் மாலையைத் தருகிறார்கள். தாமரைத் தடாகத்திலே எருமை தாண்டவமாடுகிறது.

சாந் : மோகனா! என்னடாப்பா, சந்தோஷமான நாளிது. சச்சரவு செய்யாதே.

மோகன் : சச்சரவா? சேச்சே எப்படிப்பட்ட இன்ப நாளிது. ஸ்ரீமதி இந்துமதிக்கும் ஸ்ரீஜத் பகதூருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படும் நன்னாள். வீர, தீரமுள்ள பகதூரை விவேக சிந்தாமணியாம் இந்து மதி அம்மையார் பராக்கிரமம் மிகுந்த பாலாஜியின் முன்னிலையில், சகல கலா பண்டிதர் சாந்தாஜி ஆசிர்வாதத்துடன் மணாளராகத் தேர்ந்தெடுக்கும் மங்களகரமான மாலை; சுயம்வர வேளை.