பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

93


இந்து : கேலி செய்தது போதும். உங்களுக்கு ஒரு துண்டு இரும்பினிடம் இருக்கும் பற்றை விட இது ஒன்றும் கேலிக்கிடமான விஷயமில்லை.

சாந் : அப்படிக்கேள் இந்து, அப்படிக் கேள். இன்னொரு தடவை கேள். ஒரு பெண்ணின் பிரேமைக்காக ஒரு வாளைத் துறந்துவிடக் கூடாதா என்று கேள்.

மோகன் : இந்து! உன்னை இதுவரை அறிந்து கொள்ளாதது என் குற்றம் தான். பகதூருக்கு ஏற்றவள் தான் நீ. அவன் வாள் ஏந்தமாட்டான். வாள் ஒர் இரும்புத் துண்டு அல்லவா? பேஷ்! இந்து சுதந்திரப் போருக்காக நான் ஏந்தும் வாள் ஒரு இரும்புத்துண்டு அல்லவா? எவ்வளவு அற்புதமான அறிவு உனக்கு. வலியோர் எளியோரை வாட்டும் போது, நீதியை நிலைநாட்ட நான் வீசும் வாள் ஒரு இரும்புத்துண்டு. வீழ்ச்சியுற்ற இனத்தை மீண்டும் எழுச்சிபெறச் செய்வதற்காக விளங்கும் வாள் ஒரு இரும்புத்துண்டு. வீரம், நாட்டுப்பற்று இரண்டுமற்ற நீ. இத்தனை நாட்களாக என்னிடம் உண்மையான காதல் கொண்டதாக நடித்து, ஆயிரம் தடவை 'அன்பரே! அன்பரே!' என்று அர்ச்சித்து என்னிடம் இருக்கும் பிரேமைக்காக எந்தக் கஷ்ட நஷ்டத்தையும் ஏற்றுக் கொள்ளத் தயார் என்று சத்தியம் செய்து கொடுத்து, உன் வஞ்சகத்தால் என்னைப் பித்தனாக்கி, இன்று பணத்தாசை கொண்டு படாடோபத்தில் ஆசை வைத்து, பகதூரைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்த நீ ஒரு மாமிசப்பிண்டம். இதோ, ஒரு எலும்புக்கூடு. உனக்கேற்ற மணாளன். இவன் கையிலே அந்த இரும்புத்துண்டு இல்லை; இவனுடன் கூடி வாழ்.

(போகிறான். பகதூரும் பாலாஜியும் போகின்றனர்.)

இந்து : அப்பா! உங்களால் வந்தது இவ்வளவும், அவர் இனி என்னை ஏறெடுத்துப் பார்க்கமாட்டார். ஐயோ! நீங்கள் இந்த விபரீதமான விளையாட்டை ஏன் ஏற்பாடு செய்தீர்கள்? அவருக்கு என் மீது வீணான சந்தேகம்