பக்கம்:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திரமோகன்

95


தேடவில்லையே? கங்கைக் கரைக்கா ஓடினோம். களத்திலே என்ன செய்வது, எப்படிப் போரிடுவது என்று கேட்க? மராட்டியரின் தோள் வலிமையும், அவர்கள் ஏந்திய வாளின் கூர்மையும், அப்போது தேவைப்பட்டது. இப்போது மன்னர்களை மண்டியிட வைத்த மாவீரனுக்கு சாஸ்திரத்தைக் காட்டுகிறார்கள். சாஸ்திரத்தை!

1. தள : அதைத் தவிர : வேறு வழி காணோமே?

மோகன் : எங்கே போக வழி வேண்டும் தோழரே? வீரபுரிக்கு மார்க்கம் வெகு தெளிவாக இருக்கிறது. விவேக புரிக்கும் அப்படித்தான். ஆனால் வைதீகபுரிக்குத் தான் வளைந்த பாதை இருக்கிறது.

1. தள : காகப்பட்டர் நமது தலைவரை க்ஷத்திரியராக்க இசையும் போது, நமக்கென்ன கஷ்டம்? சிக்கல் தீர்ந்து விட்டது என்றல்லவா தெரிகிறது.

மோகன் : அதை நான் மறுக்கிறேன் மாதவரே! பலமாக மறுக்கிறேன். சிக்கல் தீரவில்லை; சிக்கல் பலமாகிறது. வீர சிவாஜியின் வெற்றிகள் அத்தனையும் வீண் என்பதை நாம் பிற்காலச் சந்ததிக்குச் சாசனமாக்குகிறோம். 'போரிலே புலியாக இருந்தார். ஆனால் வைதீபுரியிலே சிக்கினார் சிவாஜி' என்று வருங்காலத்தில் மக்கள் கூறத்தான் போகின்றனர். நெடுங்காலத்துக்குப் பிறகும் போரிடவோ, ஆளவோ, உழைக்கவோ, ஊருக்கு உதவி செய்யவோ, வீரமோ, தீரமோ. தகுதியோ, திறமையோ அற்றக் கூட்டம் பெருமையுடன் தலைநிமிர்ந்து கூறத்தான் போகின்றது. மாவீரன், மராட்டியம் பெற்றெடுத்த தீரன், களத்திலே சூரன் சிவாஜி. ஆனால் எமது காக்கப்பட்டரிடம் அடைக்கலம் புகுந்த பிறகே. அரியாசனம் ஏற முடிந்தது. எமது ஆதிபத்தியத்தைப் பாரீர் என்று பேசத்தான் போகிறது. வீரத் தலைவனே! வேண்டாம் வேண்டாம். இந்த விபரீத காரியம். மராட்டியத்தின் மானத்தைக்