பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

சிங்: அதுக்கில்ல வேதம்மா! இப்படியெல்லாம் நான் உதவி செய்தாலும் ஊருல இருக்கிறவக என்ன பேசுறாக தெரியுமா? சிங்கார முதலி ஊருப் பணத்தை மூட்டையடிச்சு வாழ்றான்னு பேசுறாக, எனக்கோ சிவன் கோவில் வேலையே சரியா இருக்கு. அதுக்கு ஐயாயிரம் ரூபா செலவு செய்து கும்பாபிஷேகம் செய்யப்போறேன். இப்ப செலவழிச்சா பகவான் பத்து நூறா பின்னாடி தருவாரு இந்தக் கை வாங்கிப் பழக்கப்படல வேதம்மா. கொடுத்துப் பழக்கப்பட்ட கை!

வேத: கும்பாபிஷேகத்துக்கு நான் இரு நூறு ரூபா தர்ரேணுங்க.

சீங்: நீ நிலம் வச்சு வாங்கியிருக்கிற பணம். வேண்டாம் வேதம்மா!

வேத:பாவிபரப்பா பணந்தான் சாமிக்கு ஆகாது. என் பணம் ஏன் ஆகாதுங்க!

சிங்: ஊம் சரி ஏ கணக்கப்பிள்ளை!

கணக்: (வந்து) எசமான்?

சிங்: எழுது! சிவன்கோவில் கணக்கில கும்பாபிஷேகத்துக்காக வேதம்மா வரவு முந்நூறு.

வேத: இருநூறுதானுங்களே சொன்னேன்.

சிங்: ஓ! இருநூறு தான் சொன்னியோ, இருநூறு ரூபா எழுதிக்க, பாக்கி ஆயிரத்தி எண்ணூற வேதம்மா பேருல வரவு வச்சிக்க.

கணக்: சரிங்க. (வேதம்மாள் கொடுக்கும் பணத்தை சிங்காரவேலர் வாங்கிக்கொள்கிறார்)

சிங்: இந்தாயா கணக்கப்பிள்ளை! இவக நம்மவக. அஞ்சு பத்து கேட்டா நான் இல்லாட்டாலும் கொடு. நான் வரட்டும்னு சொல்லி அலையவிடாதே.