பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

ஒரு வேளை சாப்பாட்டிற்கு விதியற்று மடிகிறார்களே அவர்கள் உன் கண்களுக்கு தெரியவில்லையா எனக் கேட்டார். நீ பீதாம்பரம் உடுத்தியிருக்கிறாய். அவர்கள் உடுத்திருப்பது கந்தல் துணி நீபட்டுமெத்தையிலே படுத்திருக்கிறாய் அவர்களுக்கு கிழிந்த பாய் கூட கிடைக்காமல் அவதியுறுகிறார்கள். உனக்கு கோவில் போல வீடு. அவர்களுக்கு நண்டுத்தொண்டு போல கூடு. உனக்கு இவைகளைப் பார்த்தபிறகும் ரத்தம் கொதிக்கவில்லையா என்று கேட்டபடி கடுங்கோபமாக இருந்தார். நான் பயப்படவில்லை. அறனாரை நோக்கினேன். ஏன்? ஏறிட்டுப் பார்த்தேன். அவரவர் கர்ம வினைப்படி நடக்கும் என்றேன். அறனாரின் முகம் கோபத்தால் சிவந்தது. திரிபுரம் எரித்தவர் போல் ஆடினார். என் தலை சுழன்றது.

ஒருவன் - அப்படியா! பிறகு!

துரை- என் உருவம் போலவே இருக்கும். அதை என் உடலிலிருந்து பிரித்து எடுத்தார் அறன். அதுதான்என்னை பிடித்திருந்த அஞ்ஞான சொரூபம். உன் அடியேனை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கை கூப்பி நின்றேன். உன்னால் நடைபெறவிருக்கும் காரியங்கள் அநேகம் இருக்கின்றன — அவைகளை முடித்துவிட்டு என் பாதார விந்தங்களை அடைவாய் என்று அருள் கூறினார். நீ எங்கு சென்றாலும் நான் உன்னை விட மாட்டேன் நாளை மீண்டும் வருவேன் என்று ஓங்கார கூச்சலிட்டுக்கொண்டு அஞ்ஞானம் அலறி ஓடியது. சிவன் மறைந்தார். நான் தனியானேன். மறுபடியும் அஞ்ஞானம் வந்து விட்டால் என்ன செய்வது என்று பயமாக இருக்கிறது எனக்கு.

மடாதி; (ஓடிவந்து பார்த்து) யாரடா அது ? நான் இல்லாத போது வசந்த மண்டபத்தில் நுழைந்தது?

துரை- பார்த்தீர்களா பக்தகோடிகளே ! மறுபடியும் அஞ்ஞானம் வந்துவிட்டது.

மடாதி- யாரடா அஞ்ஞானம். என்ன இதெல்லாம்.