பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

வாஞ்: பெரிய மனுஷ்யாளண்ட கேட்பதாவது.ஏன் ஓய் நீர் வைஷ்னுவா தானா?

விஷ்: ஆமா ஓய்! என்ன கெடச்சது அதைச் சொல்லும்.

வாஞ்: உம்மகிட்ட கெடச்சத சொல்றதுல தோஷமில்ல. ஆயிரம் கெடச்சது ஓய்!

விஷ்: ஆயிரமா!? பிறாமணாள் சாப்பாட்டுக்கு எவ்வளவு செலவு?

வாஞ்: ஆள் ஒண்ணுக்கு அஞ்சு ரூபாய்க்கு குறைவிருக்காது எத்தனை வகைவகையான பொரியல்! நெய் விட்டாங்க பாரு! அப்படியே கையினாலே வாங்கி குடிச்சோம்.

விஷ்: ஆபத்துக்கு எவ்வளவு கொண்டு வந்தேள்?

வாஞ்: ரெண்டுவிசை நெய் வீட்டுக்கு வாங்கி வந்தேன்.

விஷ்: உனக்கு என்ன ஓய் முதலியார் ஆம்புட்டார். சைவம்ல!

வாஞ்: சும்மா இரும் ஓய்! எங்களுக்கு விஷ்ணுவைரின்னோ

வீஷ்: எங்க விஷ்ணுவைப்பற்றி பேச வந்துட்டீரே. சிவனுக்கு என்ன ஓய் யோக்கியதை இருக்கு?

வாஞ்: கோகுலத்துப் பெண்களோட மானத்த கெடுத்தவன் தானே விஷ்ணு!

விஷ்: தாருகாவனத்து ரிஷிகளோட பத்தினிகளைக் கெடுத்தவன் தானே உம்ம சிவன்.

வாஞ்: உங்க கிருஷ்ணன் சேலைகளைத் திருடினானே.

விஷ்: உம்ம சிவன் பார்வதி இருக்கச்சே கங்கையை தூக்கி வெச்சுண்டு ஆடினானே.

வாஞ்: உம்ம கிருஷ்ணன் வெண்ணைய திருடினானே.

விஷ்: உம்ம சிவன் விஷம் சாப்பிட்டானே.

வாஞ்: ஓய் வரதாச்சாரி! உங்களை காப்பாத்தத்தானே ஓய் எங்க சிவன் விஷம் சாப்பிட்டாரு. என்ன? நீர் இந்த சுயமரியாதைக்காரங்க மாதிரி பேசுறீர்.

விஷ: உம்ம சிவன் பிள்ளைகறி சாப்பிட்டாரே ஓய்! மகா கேவலம். உமக்கு வெட்கமா இல்ல?

வாஞ்: இங்க வாரும் ஓய்! மகாவிஷ்ணு வராகவதாரம் எடுத்தாருல அதுக்கு என்ன ஓய் ஆகாரம்!

விஷ்: என்ன ?

வாஞ்: வராகவதாரத்துக்கு என்ன ஆகாரம்னேன்?

விஷ்: என்ன ஓய் உமக்கு வாய் துடுத்துப் போச்சு!