பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மா- சாம்பசிவம்! புத்துலகக் கழகம் முன்னை விட இப்போது எப்படி இயங்கிவருகிறது.

சாம் - நல்லமுறையில் மக்களுக்கு சேவை செய்து வருகிறது.

மா- மகிழ்ச்சி நீ கடைசிவரை உன் மூச்சு உள்ளளவும் நாட்டு மக்களுக்கு பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து நாட்டை சீர்திருத்தம் செய்யவேண்டும். அதற்கு உறுதி மொழி தரவேண்டும் நீ

சாம்- தாங்கள் ஏன் இப்படிக் கேட்கிறீர்கள்?

மா- துரைராஜின் வேண்டுகோள் இதுதான்?

சாம்- துரைராஜின் வேண்டுகோளா? அவர் எங்கிருக்கிறார்?

மா- இங்குதான் ஏன் தெரியவில்லையா?

சாம்- ஆம்! இதே குரல்தான்:

மா - சாம்பசிவம் ! நான்தானப்பா துரைராஜ் !

சாம் - துரைராஜ்! (தழுவிக்கொள்கின்றனர்) நீயா துரைராஜ் இத்தனை காலமும் மாயேந்திரனாக மாறியிருந்தாய்? துரை ராஜ் எனக்காக என் வாழ்வுக்காக இவ்வளவு உதவிகள் செய்தது நீயாகத்தான் இருக்கமுடியுமென்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லையே! துரைராஜ், இவ்வளவு செல்வமும் உனக்கு எப்படிக் கிடைத்தது?

மா- சிங்காரவேலரால் கள்வன் என்று குற்றம் சுமத்தப்பட்ட தான்பல ஊர்சுற்றி அலைந்தேன். அழகூர் மடாதிபதியை ஒழிக்கவேண்டுமென்று அவரதுசீடர்கள் இருவர் என்னை வேண்டினார்கள். அதைபயன்படுத்தி அங்கிருந்த செல் வங்களை கொள்ளையடித்துவிட்டு வந்துவிட்டேன். இந்த விபரங்கள் அனைத்தும் வரதனுக்கு எப்படியோ தெரிந்து விட்டது. என்னிடம் மிரட்டி பணம் கேட்டான். நான் தர மறுத்துவிட்டேன். போலீஸில் என்னை காட்டிக் கொடுத்துவிடுவான் என்று நிச்சயமாகத் தெரிகிறது. அப்படி நான் பிடிபட்டு சிறைக்குச் சென்றால் நமது கழகத்திற்கு பெருத்த அவமாம் ஏற்படும். ஆகவே என் வாழ்விற்கு நானே முடிவு தேடிக் கொண்டேன். (தடு மாறுகிறான்)

சாம்- முடிவு தேடிக் கொண்டாயா? ஏன்? துரைராஜ் ஏன் ஒருமாதிரியாக இருக்கிறாய்.

மா: என்வேலை முடிந்தது. விஷம் வேலைசெய்ய ஆரம்பித்து விட்டது.