பக்கம்:சமணமும் தமிழும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

சமணமும் தமிழும்


1. லோசம்: அஃதாவது மயிர் களைதல். சமண முனிவர் துறவு கொள்வதற்கு முன்னர்த் தீக்ஷைபெறுவர். தலை மயிரைக்களைவது தீக்ஷையில் இன்றியமையாதது. தலை மயிரைக் கத்தியால் மழிக்காமல் கையினால் பிடுங்கிக் களைய வேண்டும். மீண்டும் மயிர் வளரும்போதெல்லாம் அவ்வப்போது பிடுங்கிக் களையவேண்டும். இதனைச் செய்யும் நாட்களில் பட்டினி நோன்பிருக்கவேண்டும். இவ்வாறு மயிர் களையும்போது தேகத்தில் உண்டாகும் பொறுத்தற்கரிய பெரிய வலியைப் பொறுத்துக்கொள்வது, சமணத் துறவியின் துன்பத்தைப் பொறுத்துக்கொள்ளும் ஆற்றலையும் மனவலிமையையும் தேகத்தின் மேல் பற்றின்மையையும் காட்டுகிறது.

2. திகம்பரம்: அதாவது நிர்வாணமாக இருத்தல். நகை முதலியவற்றை நீக்கித் துணி, தோல், மரவுரி, இலை முதலியவற்றாலும் உடலை மூடாமல் திகம்பரமாக (ஆகாயமே உடையாக) இருத்தல். - “பிறப்பறுக்கலுற்றார்க்கு உடம்பும் மிகை” எனக் கண்டு தமது உடலையும் தமதன்று என உடற்பற்றையும் நீக்கிய சமணமுனிவர், அது தொடர்பான உடை உடுத்தல் முதலியவற்றையும் நீக்கி முழுத்துறவு கொள்வர். அன்றியும், வெய்யிலின் வெம்மையும் குளிரின் தண்மையும் தேகத்தில்பட்டால் அவற்றையும் பொறுத்துக் கொள்வதும், எறும்பு கொசுகு முதலியவை கடித்தால் அத்துன்பங்களையும் தாங்கிக்கொள்வதும் உடம்பு தனதன்று எனத் துணிந்த சமணமுனிவரின் கடமையாம்.

3. நீராடாமை: துறவு நிலையின் உயர்ந்தபடியிற் சென்று உடம்பும் தமதல்லவென்று துறந்து அதற்கு உடையுடுத்துவதும் பற்றுக்குக் காரணமாகும் என்று கருதித் திகம்பரநிலையை மேற்கொண்ட சமண முனிவர் உடம்பில் உண்டாகும் வியர்வை அழுக்கு முதலியவற்றைக் கழுவிப் போற்றமாட்டார். நீராடிச் செய்யும் புறத்தூய்மையைவிட அகத் தூய்மையே சிறந்ததெனக் கருதுவர் சமண முனிவர். இதுபற்றி நீலகேசி உரையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்திரிய ஜயார்த்தமாக அஸ்நான