பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

தஞ்சாவூர் தோழர் தியாகராஜனுக்கும், சாமியப்பாவுக்கும் வளமையைத் தந்த நெல், தம்பிரானார் சடையிலே பொன் பூக்கவைத்த் அருமை நெல் என்று பாறையிலே தூவினால் விளையுமா?

இந்த நாட்டிலே முதலில் மேடுபள்ளங்களைத் திருத்த வேண்டும். மேடுபள்ளங்கள் என்றால் மக்கள் உள்ளத்திலே நீண்ட காலமாக இடம் பெற்றிருக்கும் மேடுபள்ளங்களைத் திருத்தவேண்டும். கும்பமேளா பாறையைத் தீவிரமாகத் திருத்த முயலும்போது கஷ்டங்கள் பல ஏற்படும். வைதீக வல்லூறுகளும் சனாதனச் சர்ப்பங்களும் சீறி எழும்! சர்க்கார் தம் அதிகாரத்தைப் பிரயோகிப்பர். இந்தச் சர்க்கார் ஏமாந்த நோத்திலே ஓட்டுபெற்ற பலத்தால் ஆட்சிப் பீடத்திலே அமர்ந்திருக்கிறார்கள். நான் தைரியமாகக் கூறுகிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலிலே நின்றால் இன்றுள்ள மந்திரிகளில் பலர் முக்காட்டுடன் உலவவேண்டி வரும்: மக்களின் உரிமைப் போராட்டத்தில் சர்க்கார் தலையிடுவது கூடாது, கூடாது.

ஆனா, ஆவன்னா தெரியாத குழந்தைகளுக்கு எழுத்தை எண்ணித் தருவது போல, இந்த சர்க்கார் உரிமையை அளந்து -- நிறுத்து -- உரை கல்லில் உரைத்துப் பார்த்துத் தருகிறார்கள்.

சுதந்திர நாட்டிலே சர்க்கார் விரும்புகிற பேச்சு உரிமையைத் தரவில்லை. பேச்சுரிமை, எழுத்துரிமை நாட்டில் இல்லையென்றால் அது நாகரிக சர்க்காருக்கு அழகாகுமா?

மேதின விழாவில் நம் சர்க்கார் ஒற்றர்களை அனுப்புகிறார்களே, ஏன்? மேதின விழாவில் நாம் என்ன பேசுவோம்? மேதின விழாவில் மேதினத்தின் சரித்திரத்தைப் பற்றியும், தொழிலாளர்கள் நலம் பற்றியும் தானே பேசுவோம். இதற்கு ஏன் சர்க்கார் ஒற்றர்? இங்குப் பேசுவதையெல்லாம் சர்க்காரின் ஒற்றர் ஏன் எழுத வேண்டும்?

"மேதின விழாவில் சர்க்காலாக் கண்டித்துப் பேசினார்களா? அப்படிப் பேசியவர்களை யெல்லாம் பிடி!