பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

நேருவுக்கு அமெரிக்காவில் வரவேற்புக்கு மேல் வரவேற்பு, உபசாரத்திற்கு மேல் உபசாரம், விருந்துக்கு மேல் விருந்து இவ்வளவும் ஏன்? நேருவை அமெரிக்க முதலாளிகளிடம் சிக்கவைப்பதற்காகவே.

"இந்தியாவிலே உணவுப் பஞ்சம்; கோதுமை உங்கள் நாட்டிலே வேண்டிய அளவு உள்ளது; மக்களினமும் விலங்கினமும் உண்டு. மிகுந்ததை விலைக்குத் தந்தால் போதும். இதற்குப் பதிலாக எங்கள் நாட்டிலேயிருந்து இராமாயணம், பகவத்கீதை போன்ற அரிய நூல்களை தருகிறோம்” என்று பண்டிதகேரு கேட்டாரா? இல்லை.

விருந்தளித்தோரிடம் நேரு கோதுமையை என்ன விலைக்குத் தருகிறீர்கள்? என்று கேட்டார். அவர்கள் அதற்கு அளித்த விடை என்ன தெரியுமா?

"கோதுமை வேண்டுமென்றால் அது வேறு விஷயம். கோதுமையின் விலையை - கோதுமை வியாபாரிகளிடமே கேட்டுக்கொள்ளுங்கள், விருந்தென்றால் விருந்து, வியாபாரமென்றால் வியாபாரம்” என்பதுதான். இதேமாதிரிதான் நம் நாட்டிலே உள்ள மார்வாடிகள் கூட!

”வட்டியில் ஏதாகிலும் சலுகை காட்டப்பா" என்றால் ”வட்டியென்றால் வட்டி, கணக்கென்றால் கணக்கு, வேண்டுமானால் ஒரு கப் காபி சாப்பிடு” என்கிறான் மார்வாடி. இதைத்தான் அங்கு பெரிய மார்வாடி கூறிவிட்டார். பண்டித நேரு அமெரிக்காவுக்குச் செல்கிறார் என்றால் நாபில்ஸ் சகிதம் போட்டா பிடிக்கச் செல்கிறார்கள். நேரு அமெரிக்கா செல்வதற்கு முன்னரே கூட நேருவின் படங்கள் அங்குக் காட்டப்படுகின்றன. சினிமா வாயிலாகவும், பத்திரிகை வாயிலாகவும் நேரு அங்கு நன்கு விளம்பரம் செய்யப்படுகிறார். இப்படி விளம்பரம் செய்யப்பட்ட நேரு அவர்களாலேயே நம் நாட்டுக்குக் கோதுமை யைக் கொண்டுவர முடியவில்லை!