பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

போலீஸ்காரர்களுக்குக் கொஞ்சம் ஞாபக மறதியும் ஏறபடும்படி செய்து விட்டால் போதுமே! இதுபோன்ற பலாத்காரச் செயல்களால் நாட்டின் நிலையை எப்படி உயர்த்த முடியும்? நாட்டிலே அறிவுக் கதிர்களைப் பரப்பிய பின்னர் தான் பொருளாதாரப் புரட்சியை உண்டாக்க முடியும்.

சர்க்கார், முதலாளிகள், கம்யூனிஸ்ட்கள் எல்லோரும் நம்மை சந்தேகிக்கிறார்கள். பத்திரிகைகளோ இருட்டடிப்பு செய்கின்றன என்றாலும் நாம் -- வேகமாகவே வளர்ந்து வருகிறோம்.

தோழர் காமராஜ் பரமக்குடியில் பேசும்போது குறிப்பிட்டாராம் :--

நிலத்தை உழுபவனுக்கு நிலம் சொந்தமானால், அறிவாள் வைத்திருப்பவனுக்கு அழகிய கதிரும், கோணி வைத்திருப்பவனுக்கு நெல்லும் சொந்தமாகிவிடாதா என்று! காமராஜரின் இந்த விளக்கம் உங்களுக்கு விந்தையாக இல்லையா?

நேரு சர்க்கார் எங்கு சென்றாலும் உற்பத்தியைப் பெருக்கு, உற்பத்தியைப் பெருக்கு என்றே சொல்லி வருகிறார்கள். ஒரு விதத்திலே நாட்டிலே உற்பத்தி (குழந்தை உற்பத்தி) அதிகமாகிக் கொண்டுதான் வருகிறது. நாம் என்ன உண்ணாமல், உறங்காமல் இருக்கிறோம்? சர்க்கார் தினமும் உற்பத்தியைப் பெருக்கு, உற்பத்தியைப் பெருக்கு என்று சொல்லுகிறார்களே தவிர, உள்ள சூழ்நிலையைப் பற்றி அவர்கள் சிந்திப்பதேயில்லை! கிணற்றை ஒரு ஆணியைக் கொண்டு தோண்டிவிட முடியாது. கடைப்பாறை இருந்தால் கொஞ்சம் கஷ்டப்பட்டுத் தோண்டி முடிக்கலாம். ஆணியை உபயோகித்தால் கையில் காயம் உண்டாகும், மிக விரைவில் தோண்ட வேண்டுமானால் நமக்கு விஞ்ஞான சாதனங்கள் தேவை. விஞ்ஞான சாதனங்களைப்பற்றி மக்கள் அறிந்து கொள்வதற்கு முன்னர் மக்களுக்கு விஞ்ஞானத்திலே நம்பிக்கை ஏற்படும்படி செய்யவேண்டும், அப்போதுதான் உற்பத்தி பெருக வழியுண்டு.